ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனின் ஆவியானவரால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்லமாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி யாரும், “இயேசுவே கர்த்தர்” என்று அறிக்கை செய்யவுமாட்டான்.
பரிசுத்த ஆவியானவர்மூலம் ஒருவருக்கு ஞானமுள்ள வார்த்தையை வெளிப்படுத்தும் வரமும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர்மூலம் அறிவை வெளிப்படுத்தும் வரமும் கொடுக்கப்படுகிறது.
உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார்.
நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்?
எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது.
உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம்.
அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார்,
உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார்.
எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே.