நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள்.
தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது.
மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.
அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார்.
ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர்.
நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.
சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது.
(18-19) சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார்.
சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம்.
சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார்.
சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.
முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார்.