விருப்பம்போல் செய்ய எனக்கு உரிமை இல்லையா? நான் அப்போஸ்தலன் அல்லனோ? நம் ஆண்டவராகிய இயேசுவை நான் காண வில்லையா? ஆண்டவருக்குள் நீங்கள் வாழும் முறை என் உழைப்பின் பயனன்றோ?
மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் இராவிடினும், உங்களுக்காகவது நான் அப்போஸ்தலனே. ஏனெனில், என் அப்போஸ்தலப் பணிக்கு நீங்களே ஆண்டவருக்குள் அத்தாட்சியாய் இருக்கிறீர்கள்.
எவனாவது தன் சொந்த செலவில் போர் வீரனாய் உழைப்பானா? திராட்சைத் தோட்டம் வைப்பவன் எவனாவது அதன் கனியை உண்ணாதிருப்பானா? ஆடு மாடு மேய்ப்பவன் எவனாவது அவற்றின் பாலைப் பருகாதிருப்பானா?
மோயீசனது சட்டத்தில், 'போரடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே' என எழுதியிருக்கிறது. மாடுகளைப் பற்றிக் கடவுளுக்குக் கவலையா? எங்களுக்காகவே இதைச் சொல்லுகிறார் என்பதில் ஐயமென்ன? எங்களுக்காகவே இது எழுதியுள்ளது
மற்றவர்களுக்கு உங்கள்மேல் இந்த உரிமையிருந்தால், அவர்களைவிட எங்களுக்கு அதிக உரிமையில்லையா? ஆயினும் இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை; மாறாக, கிறிஸ்துவின் நற்செய்திக்கு எங்களால் எந்தத் தடையும் ஏற்படாதபடி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுகிறோம்.
நானோ இவ்வுரிமைகளில் ஒன்றையேனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வுரிமைகள் எனக்கு வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. இப்படி உரிமை பாராட்டுவதை விடச் சாவதே எனக்கு நலம்,.
நான் பாராட்டக்கூடிய பெருமையை யாரும் வெறுமையாக்க விடமாட்டேன். நற்செய்தியை அறிவிப்பதுகூட நான் பெருமைப் படுவதற்குரியதன்று, அது என்மேல் சுமத்தப்பட்ட கடமையே. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ! எனக்குக் கேடு;
நானாகவே இந்த வேலையை மேற்கொண்டிருந்தால், அதற்குத் தக்க ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் அது என்மேல் சுமத்தப்பட்டதாயிருப்பதால், கண்காணிப்பாளன் என என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலையே செய்கிறேன்.
ஆகவே,. எனக்குரிய ஊதியம் எது? நற்செய்தியை நான் அறிவிக்கும்போது அந்த நற்செய்தி எனக்குத் தரும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உங்களுக்கு எச்செலவுமின்றி, அந்நற்செய்தியை வழங்குவதே எனக்குரிய ஊதியம்.
யூதர்களை வசமாக்க, யூதருக்கு யூதனைப்போல் ஆனேன். யூத சட்டத்திற்குட்பட்டவர்களை வசமாக்க, நான் அதற்கு உட்படாதவனாயிருந்தும், அச்சட்டத்திற்குட்பட்டவர்களுக்கு அவர்களைப்போல் ஆனேன்.
திருச்சட்டத்தை அறியாதவர்களை வசமாக்க, அவர்களுக்காகச் சட்டம் அறியாதவனைப் போல் ஆனேன். நானோ கடவுளின் சட்டத்தை அறியாதவன் அல்லேன். 'கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவனே.
பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் எல்லாரும் ஓடினாலும், பரிசு பெறுபவன் ஒருவனே என்பது உங்களுக்குத் தெரியாதா? பரிசு பெறுவதற்காக நீங்களும் அவர்களைப் போல் ஓடுங்கள்.