சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.