இவை அனைத்தும் சாலொமோனின் நீதி மொழிகள் (ஞானவார்த்தைகள்): ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
கர்த்தர் நல்லவர்களைப் பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.
சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.
நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள்.
ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக் கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச் செல்வான்.
நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.