நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். நான் அவர்களை நேசித்தேன். ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான். எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும். அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன். என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.