பயிரிடும் நிலத்தின் பற்பல விதக் கனிகளின் புதுப்பலனை எடுத்து ஒரு கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்டிருக்கும் திருவிடத்திற்கு போ.
அங்கு இருக்கும் குருவை அணுகி: ஆண்டவர் எந்த நாட்டை எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டருளியிருந்தாரோ அதனுள் நான் புகுந்துள்ளேனென்று உம் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன் என்று சொல்வாய்.
நீயோ உன் ஆண்டவருடைய முன்னிலையில் வாய்விட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: சீரிய நாட்டினன் ஒருவன் என் தந்தையைத் துன்புறுத்தியதினால் அவர் கொஞ்ச மக்களோடு எகிப்துக்குப் போய், அங்கே பெரிய பலத்த கணக்கிட முடியாத இனமானார்.
அதனால் ஆண்டவர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய புதுப்பலனை நான் ஒப்புக்கொடுக்க வந்தேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் வைத்து அவரைப் பணிந்து தொழக்கடவாய்.
பின்னர் நீயும் லேவியனும் உன்னோடிருக்கிற அந்நியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டுக்கும் அருளிய எல்லா நன்மைகளையும் உபயோகித்து விருந்தாடுவாயாக.
புதுப்பலனைக் கொடுத்த மூன்றாம் ஆண்டாகிய பத்திலொரு பாகம் செலுத்தவேண்டிய ஆண்டு முடிந்த பின்னர், லேவியன், அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்கள் உன் வாயில்களில் உண்டு நிறைவு கொள்ளும்படி பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கக்கடவாய்.
அப்பொழுது, நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் போய் அவரை நோக்கி: நீர் எனக்குக் கற்பித்தபடி நான் புனிதமானவையெல்லாம் என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் அகதிகளுக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவுமில்லை, மறந்து போகவுமில்லை.
நான் துக்கம் கொண்டாடின போது அதை உண்ணவுமில்லை, உலகியல் காரியத்திற்கு அதில் ஒன்றையும் உபயோகிக்கவுமில்லை, அவைகளை இழவுக்காகச் செலவழித்ததுமில்லை. என் கடவுளுடைய திருவார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்து நீர் கற்பித்தபடி எல்லாவற்றையும் செய்தேன்.
ஆண்டவரே உம்முடைய புனித இடமாகிய விண்ணகமிருந்து கண்ணோக்கிப் பார்த்து, உன் மக்களாகிய இஸ்ராயேலரும், நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் பொழிகிற நாடும், ஆசீர் பெற அருளவேண்டும் என்று மன்றாடுபாய்.
இந்தக் கட்டளைகளையும் இந்த நீதி நியாயங்களையும் நீ கைக்கொண்டு, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அனுசரித்து நிறைவேற்ற வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
ஆண்டவர் எனக்குக் கடவுளாக இருப்பார் என்றும்; நான் அவர் வழிகளில் நடந்து அவருடைய சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் நியாயங்களையும் கைக்கொண்டு அனுசரிப்பேன் என்றும்; அவர் கற்பித்தபடி நடப்பேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தாய்.
நாம் நம்முடைய புகழ்ச்சி கீர்த்தி மகிமைக்காகப் படைத்த எல்லா இனத்தவரைக் காட்டிலும் உன்னை உயர்ந்த இனமாய் இருக்கும்படி செய்வோம் என்றும்; நாம் சொல்லியபடியே நீ ஆண்டவருடைய புனித மக்களாய் இருப்பாய் என்றும், அவர் இன்று உனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார் என்றார்.