English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Nehemiah Chapters

Nehemiah 2 Verses

1 அரசர் அர்தக்சேர்செசின் இருபதாம் ஆண்டு, நீசான் மாதத்தில் அரசருக்கு முன்பாகத் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் அதை எடுத்து, அவருக்குக் கொடுத்தேன். அப்பொழுது நான் மிகவும் வருத்தமுற்றவன் போன்று தோன்றினேன்.
2 எனவே அரசர் என்னைப் பார்த்து, "நீ ஏன் இவ்வாறு வருத்தமுற்றிருக்கிறாய்? நீ நோயுற்றிருப்பதாகத் தெரியவில்லையே. இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். ஏதோ உன் மனத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது" என்றார். நானோ மிகவும் அச்சமுற்றேன்.
3 எனவே அரசரை நோக்கி, "அரசே, நீர் நீடூழி வாழ்க! என் முன்னோரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடப்பதையும், அதன் வாயில்கள் தீக்கிரையாகி இருப்பதையும் கண்டு நான் எவ்வாறு கவலையின்றி இருக்க முடியும்?" என்று சொன்னேன்.
4 அதற்கு அரசர், "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். நானோ விண்ணகக் கடவுளை வேண்டிக் கொண்டவனாய்,
5 அரசரைப் பார்த்து, "அரசர் மனம் வைத்தால், அடியேன் மீது இரக்கம் வைத்தால், நான் யூதேயா நாடு சென்று என் முன்னோரின் கல்லறைகள் இருக்கும் நகரைக் கட்டி எழுப்ப எனக்கு விடை கொடும்" என்று மறுமொழி சொன்னேன்.
6 அப்பொழுது அரசரும் அவர் அருகே அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, "இதற்கு எத்தனை நாள் செல்லும்? நீ எப்பொழுது திரும்பி வருவாய்?" என்று கேட்டனர். என்னை அனுப்பி வைக்க அரசருக்கு மனமிருந்ததை கண்டு, நான் திரும்பி வரக்கூடிய காலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
7 திரும்பவும் நான் அரசரைப் பார்த்து, "அரசருக்கு மனமிருந்தால் நான் யூதேயா நாட்டை அடையும்வரை நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வரும் ஆளுநர்கள் எனக்கு வழி விட வேண்டும் என்று ஒரு கட்டளைக் கடிதம் கொடுத்தருளும்.
8 அதேபோன்று ஆலயத்தின் கோபுரக் கதவுகளுக்கும், நகர வாயில்களுக்கும், நான் தங்கவிருக்கிற வீட்டுக்கும் தேவையான மரங்களை எனக்குக் கொடுத்து உதவும்படி அரசருடைய காடுகளின் காவலரான ஆசாப்புக்கு மற்றொரு கடிதமும் என் கையில் கொடுத்தருள வேண்டுகிறேன்" என்றேன். என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால் அரசர் என் வேண்டுகோளின்படியே செய்தார்.
9 கடிதங்களைப் பெற்றுக்கொண்ட நான் நதிக்கு அக்கரையில் வாழ்ந்து வந்த ஆளுநர்களிடம் வந்து அவர்களுக்கு அரசரின் கடிதங்களைக் கொடுத்தேன். அரசரோ என்னோடு படைத் தலைவர்களிலும் குதிரை வீரர்களிலும் சிலரை அனுப்பி வைத்திருந்தார்.
10 இதை ஒரோனியனான சனபல்லாதும், அம்மோனிய அடிமையான தொபியாசும் கேள்வியுற்ற போது, இஸ்ராயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்து விட்டானே என்று பெரிதும் துயருற்றனர்.
11 நானோ யெருசலேமுக்கு வந்து அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.
12 பின்னர் ஒரு நாள் இரவு வேளையில் ஒரு சிலரோடு நான் எழுந்து சென்றேன். நான் யெருசலேமில் செய்யுமாறு கடவுள் என்னை ஏவியிருந்ததை நான் ஒருவருக்கும் வெளிப்படுத்தவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு ஒரு மிருகமும் எனக்குக் கிடையாது.
13 நான் அன்றிரவு பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று, பறவை நாகம் என்ற நீரூற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாயிலுக்கு வந்து இடிந்து கிடந்த யெருசலேமின் மதில்களையும், தீக்கு இரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.
14 அங்கிருந்து ஊருணி வாயிலுக்கும் அரசரின் குளத்திற்கும் சென்றேன். அதற்கு அப்பால் செல்ல வழி இல்லை.
15 எனவே, அன்றிரவே நான் ஆற்றோரமாய் சென்று மதில்களைப் பார்வையிட்ட பின் பள்ளத்தாக்கு வாயில் வழியாய்த் திரும்பி வந்தேன்.
16 நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்காவது குருக்களுக்காவது மேன்மக்களுக்காவது அலுவலர்களுக்காவது வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்களுக்காவது அதுவரை ஒன்றையும் நான் வெளிப்படுத்தவில்லை.
17 பின்னர் நான் அவர்களைப் பார்த்து, "யெருசலேம் நகர் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயில்கள் தீக்கு இரையாகியிருப்பதையும், அதனால் நாம் படும் துன்பத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஆதலால் வாருங்கள். இனியும் நமக்குச் சிறுமை வராதபடி யெருசலேமின் மதில்களைக் கட்டி எழுப்புவோம்" என்று சொன்னேன்.
18 என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும் அரசர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். பின்னர், "நாம் எழுந்து மதில்களைக் கட்டுவோம்" என்றேன். அதனால் இந்த நற்பணி செய்ய விருப்பமுடன் மக்கள் முன்வந்தனர்.
19 ஒரோனியனான சனபல்லாதும், அம்மோனிய அடிமையான தொபியாசும், அரேபியனான கொசேமும் இதைக் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். "நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் அரசருக்கு எதிராய்க் கலகம் செய்யப் போகிறீர்களா?" என்று கேட்டனர்.
20 நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுளே எங்களுக்கு வெற்றி அளிப்பார். அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையை ஆரம்பிக்கப் போகிறோம். உங்களுக்கு யெருசலேமில் பங்குமில்லை, உரிமையுமில்லை. உங்கள் பெயர் விளங்க வேண்டிய நியாயம் ஏதும் இல்லை" என்று அவர்களிடம் சொன்னேன்.
×

Alert

×