Indian Language Bible Word Collections
Luke 1:14
Luke Chapters
Luke 1 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Luke Chapters
Luke 1 Verses
1
மாண்புமிக்க தெயோப்பிலுவே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளைத் தொடக்கமுதல் கண்கூடாய்க் கண்டவர்கள் தேவவார்த்தையின் பணியாளராகி நம்மிடம் ஒப்படைத்துள்ளனர்.
2
ஒப்படைத்தவாறே அவற்றைப் பலர் நிரல்பட எழுத முயன்றுள்ளனர்.
3
அப்படியே நானும் யாவற்றையும் நுணுகி ஆய்ந்தறிந்து,
4
நீர் கேட்டு அறிந்தது உறுதி எனத் தெளியும்பொருட்டு முறையாக வரைவது நலமெனக் கண்டேன்.
5
ஏரோது, யூதேயா நாட்டு அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சார்ந்த சக்கரியாஸ் என்னும் குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி, ஆரோன் குலத்தவள்; பெயர் எலிசபெத்து.
6
இவ்விருவரும் ஆண்டவருடைய கற்பனைகள் முறைமைகளின்படி குறைகூற இடமில்லாமல் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாய் நடந்துவந்தனர்.
7
எலிசபெத்து மலடியாய் இருந்தமையால், அவர்களுக்கு மகப்பேறு இல்லை. மேலும், இருவரும் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தனர்.
8
இவ்வாறு இருக்க, தம் பிரிவின் முறை வந்தபோது சக்கரியாஸ் கடவுள் முன்னிலையில் குருத்துவப் பணிசெய்து வருகையில்,
9
இறைவழிபாட்டு முறைமைப்படி ஆலயத்துள் சென்று தூபங்காட்ட அவருக்குச் சீட்டுவிழுந்தது.
10
தூபங்காட்டுகிற வேளையிலே, மக்களெல்லாரும் கூட்டமாய் வெளியே செபித்துக்கொண்டிருந்தனர்.
11
அப்பொழுது ஆண்டவருடைய தூதர் தூபப்பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவண்ணம் அவருக்குத் தோன்றினார்.
12
அவரைக் கண்டு சக்கரியாஸ் கலங்கினார்; அவரை அச்சம் ஆட்கொண்டது.
13
வானதூதர் அவரிடம், " சக்கரியாசே, அஞ்சாதே, உன் வேண்டுகோள் ஏற்கப்பெற்றது. உன் மனைவி எலிசபெத்து உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவருக்கு ' அருளப்பர் ' எனப் பெயரிடுவாய்.
14
உனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் உண்டாகும். அக்குழந்தையின் பிறப்பால் பலரும் மனமகிழ்வர்.
15
அவர் ஆண்டவர்முன்னிலையில் மேலானவராய் இருப்பார்; திராட்சை இரசமோ மதுவோ குடிக்க மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெறுவார்.
16
அவர் இஸ்ராயேலர் பலரை அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்பக்கம் திருப்புவார்.
17
தந்தையரையும் மக்களையும் ஒப்புரவாக்குவார். இறைவனுக்கு அடங்காதவர்களை நீதிமான்களின் மனநிலைக்குத் திருப்புவார். இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்ற மக்களை ஆயத்தப்படுத்துவார். எலியாசை ஆட்கொண்டிருந்த தேவ ஆவியும் வல்லமையும் உடையவராய் அவர் ஆண்டவருக்குமுன்னே செல்வார் " என்றார்.
18
சக்கரியாஸ் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயதுமுதிர்ந்தவள் " என்றார்.
19
அதற்குத் தூதர், " நான் கடவுளின் திருமுன் நிற்கும் கபிரியேல். உன்னிடம் பேசவும், இந்நற்செய்தியை உனக்கு அறிவிக்கவும் அனுப்பப்பெற்றேன்.
20
இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்.
21
மக்கள் சக்கரியாசுக்காகக் காத்திருந்தனர். ஆலயத்தில் அவர் காலாந்தாழ்த்தியது பற்றி வியப்படைந்தனர்.
22
அவர் வெளியே வந்தபொழுது, அவர்களிடம் பேச முடியவில்லை. ஆலயத்தில் ஏதோ காட்சி கண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் அவர்களுக்குச் சைகைகள் காட்டி நின்றார். அது முதல் ஊமையாகவே இருந்தார்.
23
தம்முடைய திருப்பணி நாட்கள் கடந்ததும் அவர் வீடு திரும்பினார்.
24
அடுத்து அவர் மனைவி எலிசபெத்து கருத்தரித்து ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்து,
25
" மக்களுக்குள் எனக்கிருந்த இழிவைப்போக்க ஆண்டவர் என்னைக் கடைக்கண் நோக்கி இந்நாளில் இவ்வாறு செய்தருளினார் " என்றாள்.
26
ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.
27
அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.
28
தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.
29
இவ்வார்த்தைகளை அவள் கேட்டுக் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
30
அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
31
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32
அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33
அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
34
மரியாள் தூதரிடம், "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்.
35
அதற்கு வானதூதர், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.
36
இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37
ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்.
38
மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள். என்றதும் வானதூதர் அவளிடமிருந்து அகன்றார்.
39
அந்நாட்களில், மரியாள் புறப்பட்டு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,
40
சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41
மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது.
42
எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.
43
என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?
44
உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது.
45
ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே" என்று உரக்கக் கூவினாள்.
46
அப்போது மரியாள் உரைத்ததாவது: "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.
47
என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.
48
ஏனெனில், தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.
49
ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே.
50
அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே.
51
அவர் தமது கைவன்மையைக் காட்டினார், நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார்.
52
வலியோரை அரியணையினின்று அகற்றினார், தாழ்ந்தோரை உயர்த்தினார்.
53
பசித்தோரை நலன்களால் நிரப்பினார், செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்.
54
நம் முன்னோருக்கு அவர் சொன்னது போலவே ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும் என்றென்றும் இரக்கம்காட்ட நினைவுகூர்ந்து
55
தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்."
56
மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு வீடுதிரும்பினாள்.
57
எலிசபெத்துக்குப் பேறுகாலம் வந்தது. ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
58
அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.
59
எட்டாம் நாள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்து, சக்கரியாஸ் என்று அவன் தந்தையின் பெயரையே அவனுக்கு இட விரும்பினர்.
60
ஆனால், அவன்தாய் மறுத்து, "அப்படியன்று, அருளப்பன் என்று அவனை அழைக்கவேண்டும்" எனக் கூறினாள்.
61
அதற்கு அவர்கள், "உன் உறவினருள் இப்பெயர் கொண்டவர் ஒருவரும் இல்லையே" என்று சொல்லி,
62
குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்?" என்று தந்தையிடம் சைகை காட்டிக் கேட்டனர்.
63
அவர் எழுது பலகையொன்றைக் கொண்டுவரச் சொல்லி, "இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதினார்.
64
அனைவரும் வியப்படைந்தனர். அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்.
65
அயலார் அனைவரையும் அச்சம் ஆட்கொண்டது. இச்செய்தியெல்லாம் யூதேயா மலை நாடெங்கும் பரவலாயிற்று.
66
கேள்விப்பட்டவர்கள் யாவரும் அதை உள்ளத்தில் பதித்து, "இக்குழந்தை எத்தகையவன் ஆவானோ?" என்றனர். உண்மையில் ஆண்டவருடைய அருட்கரம் அவனோடு இருந்தது.
67
அவன் தந்தை சக்கரியாஸ் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று உரைத்த இறைவாக்காவது:
68
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! ஏனெனில், தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
69
தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தது போலவே,
70
தம் அடியானாகிய தாவீதின் குலத்திலே மீட்கும் வல்லமை எழச் செய்தருளினார்.
71
இவ்வாறு நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்பவர் அனைவரின் கையிலிருந்தும் மீட்டருளினார்.
72
நம் முன்னோர்க்கு இரக்கங்காட்டி, நம் பகைவரின் வாயினின்று விடுதலை பெற்று,
73
"அச்சமின்றி நம் வாழ்நாளெல்லாம் அவர் முன்னிலையில், புனிதத்தோடும் நீதியோடும் அவருக்குப் பணிபுரிய, "
74
தாம் வழிவகுப்பதாக அவர் நம் தந்தையாம் ஆபிரகாமுக்கு அளித்த உறுதிமொழியையும்,
75
தமது பரிசுத்த உடன்படிக்கையையும் நினைவுகூர்ந்தருளினார்.
76
நீயோ பாலனே, உன்னதரின் வாக்குரைப்பவன் எனப்படுவாய்.
77
பாவமன்னிப்பில் உளதாகிய மீட்பை அவர் தம் மக்களுக்கு அறிவித்து, ஆண்டவருடைய வழிகளை அமைக்க அவர்முன்னே செல்வாய்.
78
இருளிலும், இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு ஒளி காட்டவும், அமைதிப்பாதையில் நம் காலடிகளைச் செலுத்தவும்,
79
நம் கடவுளின் இரக்கப் பெருக்கத்தால், வானினின்று இளஞாயிறு நம்பால் எழுந்து வரும்".
80
பாலனோ, ஆன்ம வலிமையோடு வளர்ந்துவந்தார். இஸ்ராயேலுக்கு வெளிப்படும்வரையிலும் பாலைவனத்தில் மறைந்து வாழ்ந்தார்.