என் சகோதரரே, பலவகைச் சோதனைகளுக்கு நீங்கள் உள்ளாகும் போது, அவை எல்லாம் மகிழ்ச்சி என்றே எண்ணுங்கள். உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால், மனவுறுதி விளையும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
உங்களுள் எவனுக்காவது ஞானம் குறைவாயிருந்தால், அவன் கடவுளிடம் கேட்கட்டும்; அவனுக்குக் கொடுக்கப்படும். முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர் அவர்.
கதிரோன் எழ, வெயில் ஏறி, புல்லைத் தீய்த்து விடுகிறது. பூக்களோ உதிர்ந்து விட, அழகிய காட்சி மறைந்து விடுகிறது. அவ்வாறே செல்வமுள்ளவனும் தான் மேற்கொள்ளும் காரியங்களில் வாடிப்போவான்.
சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவன் பேறுபெற்றவன். இதனால் அவனது தகைமை எண்பிக்கப்படும்; இறைவன் தம்மீது அன்பு செலுத்துவோர்க்கு வாக்களித்த வாழ்வை அவன் வெற்றி வாகையாகப் பெறுவான்.
சோதனைக்குள்ளாகும் எவனும் 'இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது' எனச் சொல்லக் கூடாது. ஏனெனில், கடவுள் தீமைபுரியச் சோதிக்கப்படுபவர் அல்லர்; ஒருவரையும் அவர் சோதிப்பதுமில்லை.
நன்மையான எக்கொடையும், நிறைவான எவ்வரமும், விண்ணினின்றே வருகின்றன. ஒளியெல்லாம் படைத்த தந்தையே அவற்றிற்குப் பிறப்பிடம். அவரிடம் எவ்வகை மாற்றமும் இல்லை; மாறி மாறி நிழல் விழச் செய்யும் ஒளியன்று அவர்.
என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக் கேட்பதற்கு விரைதல் வேண்டும்; பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்; சினங்கொள்வதற்கும் தாமதித்தல் வேண்டும்.
ஆகவே, பெருக்கெடுக்கும் தீமையையும் மாசு அனைத்தையும் அகற்றி, உங்கள் உள்ளத்திலே ஊன்றப்பெற்ற வார்த்தையை அமைந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; இவ்வார்த்தையே உங்கள் ஆன்மாவை மீட்க வல்லது.
ஆனால் நிறைவான திருச்சட்டத்தை, விடுதலையாக்கும் அச்சட்டத்தைக் கூர்ந்து நோக்கி அதிலே நிலைப்பவன் அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை; கேட்பதை மறந்து விடுவதுமில்லை; அதன்படி நடக்கிறான். அதன்படி நடப்பதால் அவன் பேறு பெற்றவன்.
தந்தையாகிய கடவுள் முன்னிலையில் புனிதமும் மாசற்றதுமான தொண்டு எதுவெனில், வேதனையுறும் அனாதைகள், கைம்பெண்கள் இவர்களை ஆதரிப்பதும், உலகத்தால் மாசுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வதுமே.