Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Corinthians Chapters

1 Corinthians 7 Verses

1 இப்பொழுது நீங்கள் எழுதிக்கேட்டவற்றைக் குறித்துப் பேசுகிறேன். பெண்ணைத் தொடாமலிருப்பது நன்று.
2 ஆனால் கெட்ட நடத்தை எங்கும் மிகுதியாயிருப்பதால், ஒவ்வொருவனுக்கும் மனைவி இருக்கட்டும். ஒவ்வொருத்திக்கும் கணவன் இருக்கட்டும்.
3 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யட்டும். அவ்வாறே மனைவியும் கணவனுக்குச் செய்யட்டும்.
4 மனைவிக்குத் தன் உடல்மேல் உரிமையில்லை; கணவனுக்கே அந்த உரிமையுண்டு. அவ்வாறே கணவனுக்கும் தன் உடல் மேல் உரிமையில்லை; மனைவிக்கே அந்த உரிமையுண்டு.
5 ஒருவர்க்கொருவர் செய்யவேண்டிய கடமையை மறுக்காதீர்கள் செபத்தில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலத்திற்கு அக்கடமையைச் செய்யாமலிருக்கலாம். ஆனால், அதற்கு இருவரும் உடன்படவேண்டும். அதன்பின் முன்போல் கூடி வாழுங்கள். இல்லாவிட்டால் தன்னடக்கக் குறையைப் பயன்படுத்தி, சாத்தான் உங்களைச் சோதிப்பான்
6 இதையெல்லாம் நான் கட்டளையாகச் சொல்லவில்லை. உங்கள் நிலைமைக்கு இரங்கியே சொல்லுகிறேன்.
7 எல்லாரும் என்னைப்போல இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். ஆயினும் கடவுள் தரும் தனிப்பட்ட வரத்தை ஒவ்வொருவனும் கொண்டிருக்கிறான் ஒருவனுக்கு ஒருவகையான வரமும், வேறொருவனுக்கு வேறு வகையான வரமும் கிடைக்கிறது.
8 மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்லுவது: நான் இருப்பதுபோல அவர்களும் இருந்துவிடுவதுதான் நல்லது.
9 ஆனால் இச்சையை அடக்க இயலாமற் போனால் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் காமத்தால் தீய்வதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
10 மணமானவர்களுக்கு நான் தரும் கட்டளையாவது உண்மையில் இக்கட்டளை என்னுடையதன்று, ஆண்டவருடையதே மனைவி கணவனை விட்டுப் பிரியலாகாது
11 பிரிந்தால் மறுமணம் ஆகாமலே இருக்கவேண்டும் அல்லது கணவனோடு ஒப்புரவாக வேண்டும். கணவனும் மனைவியைக் கைவிடலாகாது.
12 மற்றவர்களுக்கு நான் சொல்லுவது - இது ஆண்டவர் சொன்னதன்று; நான் சொல்லுவது சகோதரன் ஒருவனுக்கு அவிசுவாசியான மனைவி இருந்து அவள் அவனோடு கூடிவாழ உடன்பட்டால், அவன் அவளைக் கைவிடலாகாது.
13 பெண் ஒருத்திக்கு அவிசுவாசியான கணவன் இருந்து, அவன் அவளோடு கூடிவாழ உடன்பட்டால் அவள் கணவனைக் கைவிடக்கூடாது.
14 அவிசுவாசியான கணவன் தன் மனைவியால் புனிதமடைகிறான்; அங்ஙனமே அவிசுவாசியான மனைவி அந்தச் சகோதரனால் புனிதமடைகிறாள்; இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் மாசுபட்டவர்களாய் இருப்பார்கள். இப்பொழுதோ புனிதமாய் இருக்கிறார்கள்.
15 ஆனால் இருவருள் அவிசுவாசியாயிருப்பவர் பிரிந்துபோனால் போகட்டும். இத்தகைய சூழ்நிலையில் சகோதரனோ சகோதரியோ திருமணப் பிணைப்பால் கட்டுப்பட்டவர் அல்லர். அமைதியாக வாழவே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்.
16 மாதே, உன் கணவனை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவியை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்?
17 எது எப்படியிருப்பினும், ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் பகிர்ந்தளித்த வரத்தின்படியே, கடவுள் ஒவ்வொருவனையும் அழைத்திருக்கும் நிலையின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும். எல்லாச் சபைகளிலும் நான் கற்பித்துவரும் ஒழுங்கு முறை இதுவே.
18 கடவுள் அழைத்தபோது ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தால் அவன் விருத்தசேதனத்தின் அடையாளத்தை நீக்கவேண்டியதில்லை. அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் இருந்தால் அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை.
19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை; கடவுளின் கட்டளைகளைக் கடைப்பித்தல் ஒன்றே தேவை.
20 எந்த நிலையில் ஒருவன் அழைக்கப்பட்டானோ அந்த நிலையிலேயே அவன் இருக்கட்டும்.
21 அழைக்கப்பட்டபோது நீ அடிமை நிலையில் இருந்தாயா? கவலைப்படாதே. ஆயினும், விடுதலைபெற வாய்ப்பிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்.
22 ஏனெனில் ஆண்டவருக்குள் வாழும்படி அழைக்கப்பட்ட அடிமை ஆண்டவர் விடுவித்த உரிமைக் குடிமகனாயிருக்கிறான். அழைக்கப்பட உரிமைக் குடிமகனோ கிறிஸ்துவின் அடிமையாயிருக்கிறான்.
23 நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமையாக வேண்டாம்.
24 சகோதரர்களே, ஒருவன் எந்த நிலையில் அழைக்கப்பட்டானோ, அந்த நிலையிலேயே அவன் கடவுள் திருமுன் நிலைத்திருக்கட்டும்.
25 மணமாகாதவர்களைக் குறித்து அண்டவர் அளித்த கட்டளை எதுவுமே எனக்குத் தெரியாது. நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும்படி ஆண்டவரின் இரக்கத்தால் வரம் பெற்றவன் என்ற முறையில் என் கருத்தைச் சொல்லுகிறேன்;
26 அதாவது, மணமாகாத ஒருவன் தான் இருக்கும் நிலையில் இருந்துவிடுவதே நல்லது. இப்போதைய நெருக்கடியை முன்னிட்டே அது நல்லதென எண்ணுகிறேன்.
27 திருமணத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறாயா? மண முறிவைத் தேடாதே. திருமணத்தால் பிணைக்கப்படாமல் இருக்கிறாயா? மணம்செய்யத் தேடாதே.
28 அப்படி நீ மணஞ்செய்து கொண்டாலும், அது பாவமில்லை. அங்ஙனமே கன்னிப் பெண் மணஞ்செய்துகொண்டாலும் அது பாவமில்லை. ஆனால் இவர்களெல்லாரும் இவ்வுலக வாழ்வில் வேதனை அடைவார்கள். இதற்கு நீங்கள் உள்ளாகக் கூடாதென்று இவ்வாறு சொல்லுகிறேன்.
29 சகோதரர்களே, நான் சொல்வது இதுதான்: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவர்களும் மனைவி இல்லாதவர்களைப்போல் இருக்கட்டும்.
30 துயருறுவோர் துயரத்திலேயே ஆழ்ந்தவர்கள் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியிலேயே மயங்கினவர்கள் போலவும் இருத்தலாகாது. பொருளை விலைக்கு வாங்குவோர். அதைத் தமக்கென்றே வைத்துக் கொள்ளாமலும், இவ்வுலகப் பயனைத் துய்ப்போர்,
31 அதிலேயே ஆழ்ந்துவிடாமலும் இருக்கட்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் அமைப்பு கடந்து செல்கிறது.
32 நீங்கள் கவலைக்கு ஆளாகதவர்களாய் இருக்கவேண்டுமென நான் விழைகிறேன். மணமாகாதவன் ஆண்டவர்க்குரியதில் கவலையாய் இருக்கிறான்; அவரை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறான்.
33 மணமானவனோ உலகத்துக்குரியதில் கவலையாய் இருக்கிறான்; மனைவியை எவ்வாறு மகிழ்விக்கலாம். என்ற நினைவாகவே இருக்கிறான். இவ்வாறு பிளவுபட்டதொரு நிலையில் அவன் இருக்கிறான்.
34 மணமாகாதவளும் கன்னிப்பெண்ணும் ஆண்டவர்க்குரியதிலேயே கவலையாய் இருக்கிறார்கள்; உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தராய் இருக்கவேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். மணமானவளோ உலகத்திற்குரியதில் கவலையாய் இருக்கிறாள்; கணவனை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறாள்.
35 நான் இதைச் சொல்வது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கன்று, உங்கள் நன்மைக்கே; எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் மனச்சிதைவின்றி நீங்கள் ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவும் வேண்டுமென்றே நான் இதைச் சொல்லுகிறேன்.
36 தனக்கு மண உறுதி செய்யப்பட்ட ஒருத்தியோடு ஒருவன் கன்னிமையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தபின், அவளிடம் தான் தகாதமுறையில் நடந்துகொள்வதாக அவனுக்குத் தோன்றலாம். ஆசையின் மேலீட்டால் மணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தால் தன் விருப்பம்போல் செய்யட்டும்; அவர்கள் மணம் செய்து கொள்ளட்டும். அதுபாவம் இல்லை.
37 ஆனால், தன் எண்ணத்தில் நிலையாய் இருந்து, எவ்விதக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய ஆற்றல் உள்ள ஒருவன், தனக்கு மண உறுதி செய்யப்பட்ட கன்னியை அந்நிலையிலேயே வைத்திருக்க முடிவு செய்தால் அவன் நல்லதே செய்கிறான்.
38 ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.
39 கணவன் உயிரோடிருக்கும்வரை மனைவி அவனுடன் பிணைக்கப் பட்டிருக்கிறாள் கணவன் இறந்தால், தான் விரும்பும் ஒருவனை மணந்துகொள்ள உரிமை பெறுகிறாள். ஆனால் அவன் கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும்,
40 ஆயினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வாள். என் கருத்து இதுவே. என்னிடத்திலும் கடவுளின் ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.
×

Alert

×