English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Nehemiah Chapters

Nehemiah 2 Verses

1 அர்தசஷ்டா அரசனின் ஆட்சியின் இருபதாம் வருடம் நிசான் [*இந்த நிசான் மாதம் மார்ச் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை உள்ளது.] மாதத்தில் அரசனுக்குத் திராட்சை இரசம் கொண்டுவரப்பட்டபோது, நான் அந்த திராட்சை இரசத்தை எடுத்து அரசனுக்குக் கொடுத்தேன். முன்னொருபோதும் நான் அவர்முன் துக்கமாயிருந்ததில்லை.
2 எனவே அரசன் என்னிடம், “நீ வியாதி இல்லாமல் இருக்கும்போது ஏன் உனது முகம் துக்கமாய் காணப்படுகிறது? இது மனதின் துக்கமே தவிர வேறு எதுவும் இல்லை” என்றான். அப்பொழுது நான் பயமடைந்து,
3 அரசனிடம், “அரசர் என்றைக்கும் வாழ்வாராக! எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் அழிக்கப்பட்டனவாய் கிடக்கும்போது, எனது முகம் துக்கமுடையதாய் காணப்படாதோ?” என்று கேட்டேன்.
4 அதற்கு அரசன், “அப்படியானால், உனக்கு வேண்டியது என்ன?” என்று கேட்டான். அப்பொழுது நான் பரலோகத்தின் இறைவனை நோக்கி மன்றாடினேன்,
5 பின் நான் அரசனைப் பார்த்து, “அரசர் விரும்பினால், உமது அடியவனுக்கு உமது கண்களில் தயவு கிடைக்குமானால், எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவிலுள்ள அந்த நகரத்தைத் திரும்பவும் கட்டுவதற்கு அரசர் என்னை அனுப்பவேண்டும்” என்று பதிலளித்தேன்.
6 அந்த நேரத்தில் அரசனின் பக்கத்தில் அரசியும் அமர்ந்திருந்தாள்; அப்போது அரசன் என்னிடம், “உனது பிரயாணம் எவ்வளவு காலம் எடுக்கும்? எப்போது திரும்புவாய்?” என்று கேட்டான். என்னை அனுப்புவதற்கு அரசனுக்கு விருப்பமிருந்ததினால் நான் இவ்வளவு காலமாகுமென்று ஒரு நேரத்தைக் குறித்தேன்.
7 மேலும் நான் அரசனிடம், “அரசர் விரும்பினால் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள யூதாவுக்கு நான் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி ஆளுநர்களுக்குக் கடிதங்கள் தாரும்.
8 அதைவிட ஆலயத்தின் அருகேயுள்ள கோட்டையின் வாசல் கதவுகளுக்கு மரச்சட்டங்கள் செய்வதற்கும், நகர மதிலுக்கும், நான் வசிக்கப்போகும் வீட்டுக்கும் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி அரசனுடைய காடுகளைப் பராமரிப்பவனான ஆசாபுக்கும் ஒரு கடிதம் தாரும்” என்று கேட்டேன். இறைவனின் கிருபையுள்ள கரம் என்மேல் இருந்ததினால், நான் கேட்டபடியே அரசன் என் வேண்டுகோளை எனக்குக் கொடுத்தான்.
9 அப்படியே நான் ஐபிராத்து நதியின் மறுபுறமாய் உள்ள மாகாணங்களுக்குப் போனபோது, அங்கிருந்த ஆளுநர்களிடம் அரசனின் கடிதங்களைக் கொடுத்தேன். அரசன் இராணுவ அதிகாரிகளையும், குதிரைப் படைகளையும் எனது பாதுகாப்புக்காக என்னுடன் அனுப்பியிருந்தான்.
10 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் [†சமாரியா மாகாணத்தின் ஆட்சியாளர்.] , அம்மோனிய அதிகாரியான தொபியாவும் இதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரயேலரின் நலனை மேம்படுத்துவதற்காக ஒருவன் முன்வந்ததைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தார்கள்.
11 எருசலேமுக்கு நான் போய், அங்கு மூன்று நாட்கள் தங்கினேன்.
12 அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை.
13 அன்றிரவே அங்கிருந்து பள்ளத்தாக்கு வாசல் வழியே வெளியே போய் வலுசர்ப்பத்தின் துரவையும், குப்பைமேட்டு வாசலையும் நோக்கிப் போய், உடைந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், நெருப்பால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல் கதவுகளையும் பார்வையிட்டேன்.
14 அதன்பின் ஊற்று வாசலையும், அரசனின் குளத்தையும் நோக்கிப் போனேன்; ஆனால் நான் ஏறிச்சென்ற மிருகம் அதன் வழியாகச் செல்வதற்கு இடம் போதாமலிருந்தது.
15 அதனால் நகரை இரவில் சுற்றி, பள்ளத்தாக்கு வழியாக மேலே வந்து, மேலும் மதிலைப் பார்வையிட்டேன். கடைசியாக பள்ளத்தாக்கு வாசல் வழியாய் திரும்பவும் உள்ளே வந்தேன்.
16 நான் எங்கே போயிருந்தேன் என்றோ, என்ன செய்துகொண்டிருந்தேன் என்றோ அதிகாரிகளுக்குத் தெரியாதிருந்தது; ஏனெனில் நான் யூதா மக்களுக்கோ, ஆசாரியருக்கோ, உயர்குடி மக்களுக்கோ, மற்ற எந்த அதிகாரிகளுக்கோ அல்லது வேலைசெய்யப்போகிற வேறு எவருக்குமோ ஒன்றுமே கூறவில்லை.
17 பின்பு நான் அவர்களிடம், “நாங்கள் படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களே, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் எரிக்கப்பட்டுள்ளன. வாருங்கள், எருசலேமின் மதிலைத் திரும்பவும் கட்டுவோம். அப்பொழுது நாம் இனிமேலும் அவமானத்துடன் இருக்கமாட்டோம்” என்று கூறினேன்.
18 அத்துடன் நான் அவர்களுக்கு இறைவனின் கிருபையின்கரம் என்மேல் இருக்கிறதையும், அரசன் எனக்குச் சொன்னதைப்பற்றியும் கூறினேன். உடனே அவர்கள், “நாங்கள் மதிலைத் திரும்பவும் கட்டத் தொடங்குவோம்” எனப் பதிலளித்து, இந்த நல்ல வேலையைச் செய்யத் தொடங்கினார்கள்.
19 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அலுவலகனான தொபியாவும், அரபியனான கேஷேமும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, எங்களை அவமதித்து, கேலி செய்தார்கள். அவர்கள், “நீங்கள் செய்யும் செயல் என்ன? அரசனுக்கு விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறீர்களோ?” என்று கேட்டார்கள்.
20 அதற்கு நான் அவர்களிடம், “பரலோகத்தின் இறைவன் எங்களுக்கு வெற்றி கொடுப்பார். அவருடைய அடியாராகிய நாங்கள் இதைத் திருப்பிக் கட்டத் தொடங்குவோம். ஆனால் உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்கோ, உரிமை கோரிக்கையோ, சரித்திரப் பூர்வமான உரிமையோ இல்லை” என்று கூறினேன்.
×

Alert

×