அங்குள்ள வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே மூன்று ஆட்டுமந்தைகள் படுத்திருப்பதையும் அவன் கண்டான்; அக்கிணற்றில் இருந்தே அவற்றுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். கிணற்றின் வாயை மூடியிருந்த கல் பெரிதாயிருந்தது.
எல்லா மந்தைகளும் சேர்ந்தவுடன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அதன்பின் திரும்பவும் அக்கல்லைக் கிணற்றின் வாயின்மேல் முன்பிருந்த இடத்தில் புரட்டி வைப்பார்கள்.
யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
அதற்கு யாக்கோபு அவர்களிடம், “இன்னும் சூரியன் மறையவில்லையே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமும் இல்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்து மறுபடியும் மேயவிடலாம்” என்றான்.
அதற்கு அவர்கள், “எல்லா மந்தைகளும் சேரும்வரை அப்படிச் செய்யமுடியாது. சேர்ந்ததும் கிணற்றின் வாயிலிருக்கும் கல் புரட்டப்படும். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள்.
யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்ட லாபான் அவனைச் சந்திப்பதற்காக விரைவாய் வந்தான். அவன் அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். நடந்த எல்லாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான்.
அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன.
பொழுது விடிந்ததும், யாக்கோபு தன்னுடன் இருந்தவள் லேயாள் என்பதைக் கண்டான். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் ராகேலுக்காக அல்லவோ உம்மிடம் வேலைசெய்தேன்; நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான்.
மணமகளுக்குரிய ஏழு நாட்களை நீ நிறைவேற்று. பின்பு உனக்கு இளைய மகளையும் கொடுப்போம், அவளுக்காகவும் இன்னும் ஏழு வருடங்கள் நீ என்னிடத்தில் வேலைசெய்” என்றான்.
லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் நேசிக்கப்படவில்லை என்பதை யெகோவா கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
திரும்பவும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி என்று பெயரிடப்பட்டான்.
மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “இப்பொழுது நான் யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அதன்பின்பு அவள் பிள்ளைகள் பெறவில்லை.