English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 24 Verses

1 ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானான். யெகோவா ஆபிரகாமை அனைத்துக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
2 அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் வேலைக்காரனை நோக்கி:
3 “நான் குடியிருக்கிற கானானியர்களுடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்;
4 நீ என்னுடைய தேசத்திற்கும் என்னுடைய இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனாகிய ஈசாக்குக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன் என்று, வானத்திற்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய யெகோவாவை முன்னிட்டு எனக்கு ஆணையிட்டுக்கொடுக்க, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை ” என்றான்.
5 அதற்கு அந்த வேலைக்காரன்: “அந்த இடத்துப் பெண் என்னுடன் இந்தத் தேசத்திற்கு வர விருப்பமில்லாமல் இருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்கு உம்முடைய மகனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ”? என்று கேட்டான்.
6 அதற்கு ஆபிரகாம்: “நீ என் மகனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாமலிருக்க எச்சரிக்கையாக இரு.
7 என்னை என்னுடைய தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்திற்குத் தேவனாகிய யெகோவா, நீ அங்கேயிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணை அழைத்துவர, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
8 பெண் உன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அங்கே மாத்திரம் என் மகனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம்” என்றான்.
9 அப்பொழுது அந்த வேலைக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.
10 பின்பு அந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னோடு கொண்டுபோனான்; தன் எஜமானுடைய அனைத்துவகையான விலையுயர்ந்த பொருட்களும் அவனுடைய கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், ஆரம்நாரஹி நாகோருடைய ஊருக்கு வந்து,
11 ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
12 “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற யெகோவாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
13 இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே.
14 நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும்” என்றான்.
15 அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.
16 அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
17 அப்பொழுது அந்த வேலைக்காரன், அவளுக்கு நேராக ஓடி: “உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும்” என்றான்.
18 அதற்கு அவள்: “குடியும் என் ஆண்டவனே” என்று சீக்கிரமாகக் குடத்தைத் தன் கையிலிருந்து இறக்கி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
19 கொடுத்தபின், “உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றுசொல்லி;
20 சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
21 அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, யெகோவா தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.
22 ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,
23 “நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா” என்றான்.
24 அதற்கு அவள்: “நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள்” என்று சொன்னதுமல்லாமல்,
25 “எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் போதிய அளவு இருக்கிறது; இரவில் தங்க இடமும் உண்டு” என்றாள்.
26 அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, யெகோவாவை பணிந்துகொண்டு,
27 “என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பயணம் செய்துவரும்போது, யெகோவா என் எஜமானுடைய சகோதரர்களுடைய வீட்டிற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார்” என்றான்.
28 அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தாள்.
29 ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான்.
30 அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.
31 அப்பொழுது அவன்: “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பது என்ன? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம் செய்திருக்கிறேன்” என்றான்.
32 அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
33 பின்பு, அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: “நான் வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன்பாகச் சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு அவன், “சொல்லும்” என்றான்.
34 அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
35 யெகோவா என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் செல்வந்தனாக இருக்கிறார்; யெகோவா அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
36 என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவர் தமக்கு உண்டான அனைத்தையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
37 என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய பெண்களில் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்காமல்,
38 நீ என் தகப்பன் வீட்டிற்கும், என் இனத்தாரிடத்திற்கும் போய், என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கச் சொன்னார்.
39 அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு,
40 அவர்: நான் ஆராதிக்கும் யெகோவா உன்னோடு தம்முடைய தூதனை அனுப்பி, உன் பயணத்தை வாய்க்கச் செய்வார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பாய்.
41 நீ என் இனத்தாரிடத்திற்குப்போனால், என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அவர்கள் உன்னோடு பெண்ணை அனுப்பாமல்போனாலும், நீ என் ஆணைக்கு உட்படாதிருப்பாய் என்றார்.
42 அப்படியே நான் இன்று கிணற்றினருகில் வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய யெகோவாவே, என் பயணத்தை நீர் இப்பொழுது வாய்க்கச்செய்வீரானால்,
43 இதோ, நான் கிணற்றினருகில் நிற்கிறேன், தண்ணீர் இறைக்க வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
44 “நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே யெகோவா என் எஜமானுடைய மகனுக்கு நியமித்த பெண்ணாகவேண்டும்” என்றேன்.
45 நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிப்பதற்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, கிணற்றில் இறங்கிப்போய்த் தண்ணீர் எடுத்தாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
46 அவள் சீக்கிரமாகத் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் கொடுப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் கொடுத்தாள்.
47 அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு;
48 தலைகுனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானனின் சகோதரனுடைய மகளை அவருடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள என்னை சரியானவழியில் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற யெகோவவை ஸ்தோத்திரித்தேன்.
49 இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாக நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
50 அப்பொழுது லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக: “இந்தக் காரியம் யெகோவாவால் வந்தது, உமக்கு நாங்கள் நன்மையோ அல்லது தீமையோ ஒன்றும் சொல்லக்கூடாது.
51 இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; யெகோவா சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும்” என்றார்கள்.
52 ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, யெகோவாவைப் பணிந்துகொண்டான்.
53 பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான்.
54 பின்பு அவனும் அவனோடிருந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, இரவில் தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: “என் எஜமானிடத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்றான்.
55 அப்பொழுது அவளுடைய சகோதரனும், தாயும், “பத்து நாட்களாவது பெண் எங்களோடு இருக்கட்டும், அதற்குப்பின்பு போகலாம்” என்றார்கள்.
56 அதற்கு அவன்: “யெகோவா என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும்” என்றான்.
57 அப்பொழுது அவர்கள்: “பெண்ணை அழைத்து, அவளது விருப்பத்தைக் கேட்போம்” என்று சொல்லி,
58 ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள்.
59 அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,
60 ரெபெக்காளை வாழ்த்தி: “எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாகப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்களாக” என்று ஆசீர்வதித்தார்கள்.
61 அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
62 ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான்.
63 ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
64 ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
65 வேலைக்காரனை நோக்கி: “அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார்” என்று கேட்டாள். “அவர்தான் என் எஜமான்” என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
66 வேலைக்காரன் தான் செய்த அனைத்து காரியங்களையும் ஈசாக்குக்கு விபரமாகச் சொன்னான்.
67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.
×

Alert

×