எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.
மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள்.
ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான்.
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.
இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.
ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.
மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள்.