Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Daniel Chapters

Daniel 7 Verses

Bible Versions

Books

Daniel Chapters

Daniel 7 Verses

1 பாபிலோனின் அரசனாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதல் ஆண்டில் தானியேல் ஒரு கனவு கண்டான். தானியேல் தனது படுக்கையில் படுத்திருந்தபோது இந்தச் தரிசனங்களைக் கண்டான். தானியேல் தான் கண்ட கனவைப்பற்றி எழுதினான்.
2 தானியேல் சொன்னான், "நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது.
3 நான் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்த நான்கு மிருகங்களும் கடலிலிருந்து வெளியே வந்தன.
4 "முதல் மிருகம் ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அதற்குக் கழுகைப்போன்று சிறகுகளும் இருந்தன. நான் இந்த மிருகத்தை கவனித்தேன். பிறகு அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டன. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு மனிதனைப்போன்று இரண்டு காலில் நின்றது. மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 பிறகு நான் எனக்கு முன்னால் இரண்டவாது மிருகத்தைப் பார்த்தேன். இந்த மிருகம் கரடியைப் போன்றிருந்தது. அது ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. அது தனது வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, நீ விரும்புகிற எல்லா இறைச்சியையும் சாப்பிடு" என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதன் பிறகு நான் இன்னொரு மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் ஒரு சிவிங்கியைப் போன்றிருந்தது. அதன் முதுகின்மேல் நான்கு சிறகுகள் இருந்தன. அச்சிறகுகள் பறவைகளின் சிறகுகளைப் போன்றிருந்தன. இந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. இதற்கு ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.
7 அதன் பிறகு இரவில் தரிசனத்தில் என் முன்பு நான்காவது மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் மிக பயங்கரமும், பலமும் உடையதாக இருந்தது. இது மிகப் பல முடையதாகத் தோன்றியது. இதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. இந்த மிருகம் தன் இரையைப் பிடித்து நொறுக்கி தின்றது. இந்த மிருகம் மிச்சமுள்ளவற்றைக் காலால் மிதித்து துவைத்தது. இந்த நாலாவது மிருகம் நான் பார்த்த மற்ற மிருகங்களைவிட வேறுபட்டதாக இருந்தது. இந்த மிருகத்திற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8 நான் அந்தக் கொம்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கொம்புகளுக் கிடையில் இன்னொரு கொம்பு முளைத்தது. இது சிறிய கொம்பாக இருந்தது. இச்சிறிய கொம்பில் மனித கண்களைப்போன்று கண்கள் இருந்தன. இச்சிறிய கொம்பில் வாயும் இருந்தது. அந்த வாய் பேசியது. சிறு கொம்பானது மற்ற கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது.
9 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன. நீண்ட ஆயுசுள்ள அரசர் ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன. அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன. அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது. அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது. அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது. அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.
10 நீண்ட ஆயுசுள்ள அரசருக்கு முன்னால் ஒரு நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர். அவருக்கு முன்னால் கோடா கோடிபேர் நின்றார்கள். இது செயல்படத் துவங்கும் நீதிமன்றம் போல், புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப்பட்டிருந்தன.
11 நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் சிறிய கொம்பு வீண்பெருமை பேசிக்கொண்டிருந்தது. நான்காவது மிருகம் கொல்லப்படும்வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் உடல் அழிக்கப்பட்டு, அது எரிகின்ற நெருப்பில் வீசி எறியப்பட்டது.
12 மற்ற மிருகங்களின் அதிகாரமும் ஆட்சியும் அவற்றிடமிருந்து பிடுங்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட காலம்வரை வாழ அனுமதிக்கப்பட்டன.
13 இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்த போது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவைரப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.
14 மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழிக்காரர்களும் அவரைத் தொழவேண்டும். அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றென்றும் தொடரும். இது என்றைக்கும் அழிக்கப்படாமல் இருக்கும்.
15 "தானியேலாகிய நான் குழம்பி கவலைப்பட்டேன். அத்தரிசனங்கள் என் மனதிற்குள் போய் என்னைத் துன்புறுத்தியது.
16 நான் அங்கே நின்றுகொண்டிருந்த ஒருவன் அருகில் சென்றேன். இதன்பொருள் என்னவென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் இதன் பொருள் என்னவென்று எனக்கு விளக்கினான்.
17 அவன் சொன்னான், "நான்கு மிருகங்களும் நான்கு இராஜ்யங்களாகும். இந்த நான்கு இராஜ்யங்களும் பூமியிலிருந்து வந்திருக்கின்றன.
18 ஆனால் தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தைப் பெறுவார்கள். அவர்கள் இந்த இராஜ்யத்தை என்றென்றும் வைத்திருப்பார்கள்" என்றான்.
19 "பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது.
20 நான், நான்காவது மிருகத்தின் தலைமீது முளைத்த பத்துக் கொம்புகளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதில் முளைத்த சிறிய கொம்பைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். அச்சிறிய கொம்பு மற்ற பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது. அச்சிறு கொம்பிற்கு மனிதக் கண்கள் இருந்தன. அது தொடர்ந்து இறுமாப்பாய்ப் பேசியது. மற்றக் கொம்புகளை விடவும் இது குரூரமானதாகக் காணப்பட்டது.
21 நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இச்சிறு கொம்பு தேவனுடைய சிறப்பான ஜனங்களுக்கு எதிராகச் சண்டையிடத் துவங்கியது. அக்கொம்பு அவர்களைக் கொன்றது.
22 சிறு கொம்பானது, தேவனுடைய விசேஷமான ஜனங்களைத் நித்திய ஆயுசுள்ள அரசர் வந்து நியாயம்தீர்க்கும்வரை கொலைசெய்துகொண்டிருந்தது. நித்திய ஆயுசுள்ள அரசர் சிறிய கொம்பினை நியாயந்தீர்த்தார். இத்தீர்ப்பு தேவனுடைய விசேஷ ஜனங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இராஜ்யத்தைப் பெற்றனர்.
23 அவன் இதனை என்னிடம் விளக்கினான்: "நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம். இது மற்ற இராஜ்யங்களைவிட வேறுபட்டது. நான்காவது இராஜ்யமானது உலகில் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரையும் அழிக்கும். அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும்.
24 இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து அரசர்களைக் குறிக்கும். இந்தப் பத்து அரசர்களும் போனபின்பு அடுத்த அரசன் வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட அரசர்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற அரசர்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான்.
25 இந்த விசேஷ அரசன் மிக உன்னதமான தேவனுக்கு எதிராகப் பேசுவான். அந்த அரசன் தேவனுடைய விசேஷ ஜனங்களைக் காயப்படுத்தவும் கொல்லவும் செய்வான். அந்த அரசன் ஏற்கெனவே அமைக்கப்பட்ட காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற முயல்வான். தேவனுடைய விசேஷ ஜனங்கள் மூன்றரை வருடங்களுக்கு அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26 "ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த அரசனின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும்.
27 பிறகு தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தை ஆளுவார்கள். அவர்கள் பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களையும் ஆள்வார்கள். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். அவர்களுக்கு எல்லா இராஜ்யங்களில் உள்ள ஜனங்களும் மதிப்பளித்து, சேவை செய்வார்கள்.
28 "அதுதான் கனவின் முடிவாகும், தானியேலாகிய நான் மிகவும் பயந்தேன். எனது முகம் பயத்தால் வெளுத்துப்போனது. நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பற்றி மற்ற ஜனங்களிடம் சொல்லவில்லை" என்றான்.

Daniel 7:9 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×