நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே,
உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.
அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.