சூசை தம் வீட்டுக் கண்காணிப்பாளனை நோக்கி: அவர்களுடைய சாக்குகள் கொள்ளுமளவுக்குத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தை (அவனவன்) சாக்கின் வாயில் வைத்துக் கட்டிவிடு.
இளையவனுடைய சாக்கின் வாயில் எனது வெள்ளிக் கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டுவாயாக என்று கட்டளை இட்டார். சூசை சொன்னவாறே அவனும் செய்தான்.
அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது சூசை தம் வீட்டுக் கண்காணிப்பாளனை அழைத்து: நீ எழுந்து அம்மனிதர்களைப் பின் தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்வதென்ன?
நீங்கள் திருடிவந்துள்ள பாத்திரம் எனது தலைவர் குடிக்க உபயோகிக்கும் கோப்பை; அதிலேயே அவர் சகுனம் பார்த்தும் வருகிறார். நீங்கள் மிக முறையற்ற செயலைச் செய்துள்ளீர்கள் என்று சொல்வாய் என்றார்.
நாங்கள் சாக்குகளில் வாயில் கண்டெடுத்த பணத்தைக் கானான் நாட்டினின்று உம்மிடம் கொண்டு வந்தோமே! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டிலே தங்கமாவது வெள்ளியாவது திருடிக் கொண்டு போவோமென்று எண்ணுவது எப்படி?
அது கேட்டு, அவன்: உங்கள் தீர்மானப்படியே ஆகட்டும். அது எவனிடத்தில் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாகக் கடவான்; மற்றவர்கள் குற்றம் அற்றவர்களாய் இருப்பீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னான்.
சூசை அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் இப்படிச் செய்யத் துணிந்தீர்கள்? சகுனச் சாத்திரத்தில் என்னைப் போன்ற மனிதன் இல்லையென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்களோ என்று வினவினார்.
யூதா அவனை நோக்கி: தங்களுக்கு அடியோர்கள் என்ன மறுமொழி சொல்லுவோம்? அல்லது என்ன தான் பேசுவோம்? எவ்வித நியாயந்தான் கூறக்கூடும்? கடவுளே அடியோர்களின் அக்கிரமத்தை விளங்கப் பண்ணினார்! இதோ நாங்களும், எவனிடத்தில் கோப்பை கண்டெடுக்கப்பட்டதோ அவனும் தங்களுக்கு அடிமைகளானோம் என்று சொன்னான். அது கேட்டு சூசை:
அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக. கோப்பையைத் திருடியவனே எனக்கு அடிமையாகக் கடவான். நீங்களோ, சுதந்திரமுள்ளவர்களாய் உங்கள் தந்தையிடம் போங்கள் என்றார். அதன் மேல்,
யூதா இன்னும் அவனன்டை நெருங்கி, துணிந்து: துரை அவர்களே, அடியேன் கூறவிருக்கும் வார்த்தைக்கு அருள் கூர்ந்து செவிமடுப்பீராக. என்மீது கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால், நீர் பாரவோனுக்கு இரண்டாவதாய் இருக்கிறீர்; எனது தலைவராய் இருக்கிறீர்.
அதற்கு, நாங்கள் எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும் அவருக்கு முதிர்ந்த வயதில் பிறந்த ஓர் இளைஞனும் உண்டென்றும், இவனுடைய தமையன் இறந்து விட்டானென்றும், இவன் ஒருவன் மட்டுமே பெற்ற தாய்க்குப் பிள்ளையாய் இருப்பதனால் தந்தை இவன் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருக்கிறாரென்றும் துரை அவர்களுக்குச் சொன்னோம்.
நாங்கள்: போக இயலாது; எங்கள் இளைய தம்பி எங்களோடு கூட வந்தால் புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாதே நாங்கள் அந்தப் பெரிய மனிதரின் முகத்தில் விழிக்கவும் துணியோம் என்றோம்.
இப்பொழுது நீங்கள் இவனை அழைத்துப் போகும் வழியில் இவனுக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால், நரைத்த கிழவனாகிய என்னைத் துயரத்தினால், இறக்கச் செய்வீர்கள் என்றார்.
ஆகையால், நான் இளையவனை விட்டு உம் ஊழியராகிய எங்கள் தந்தையிடம் போய்ச் சேர்ந்தால், தம் உயிருக்குயிரான சிறுவன், எங்களோடு இல்லாதிருப்பதைக் கண்டு அவர் இறந்து போவார்.
நானே நியாயப்படி உம் அடிமையாய் இருக்கக் கடவேனாக. (ஏனென்றால்,) அவனுக்குப் பொறுப்பு ஏற்றவன் நானே; அவனைத் திரும்ப கூட்டி வராவிட்டால், என் தந்தைக்கு எந்நாளும் பாதகம் செய்தவனாய் இருப்பேனென்று வாக்குறுதி கொடுத்தவனும் நானே.
ஆகையால், அடியேன் சிறுவனுக்குப் பதிலாய்த் தங்களுக்கு ஊழியம் செய்யும் அடிமையாய் இருப்பேன். சிறுவனையோ, அவனது சகோதரர்களோடு கூடப் போக விடும்படி மன்றாடுகிறேன்.