English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Isaiah Chapters

Isaiah 65 Verses

1 “என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம், ‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன்.
2 நான் பிடிவாதமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன். அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி, நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
3 அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி, தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து, தொடர்ந்து என்னை என் முகத்துக்கு முன்பாகவே கோபமூட்டுகிறார்கள்.
4 அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து, இரகசியமாய் விழித்திருந்து ஆவிகளை வணங்கி, இரவைக் கழிக்கிறார்கள். பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய பானைகளில் அசுத்த இறைச்சியின் குழம்பு இருக்கிறது.
5 அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்; ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும் நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
6 “பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது: நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்; அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன்.
7 உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும் பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார். “அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து, குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள். அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.”
8 யெகோவா சொல்வது இதுவே: “திராட்சைக் குலையில் சாறு இருக்கையில், ‘அதை அழிக்காதே, அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா? அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன். அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன்.
9 யாக்கோபிலிருந்து சந்ததிகளையும், யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்; நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள், எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள்.
10 என்னைத் தேடும் என் மக்களுக்கு சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
11 “நீங்களோ யெகோவாவைவிட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் [*காத் என்றால் அதிர்ஷ்ட தேவதை என்று பொருள்] என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து, மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.
12 உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள். ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை; நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை. எனது பார்வையில் தீமையைச் செய்து நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.”
13 ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியோடிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
14 எனது ஊழியர்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்; நீங்களோ இதய வேதனையால் கதறி அழுவீர்கள்; உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள்.
15 நான் தெரிந்துகொண்டவர்களுக்கு உங்களுடைய பெயரை ஒரு சாபமாய் விட்டுப்போவீர்கள்; ஆண்டவராகிய யெகோவா உங்களைக் கொன்றுபோட்டு, ஆனால் தம்முடைய ஊழியருக்கோ அவர் வேறு பெயரைக் கொடுப்பார்.
16 நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும், உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான். பூமியில் ஆணையிடுகிறவனும், உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான். ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு, எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும்.
17 “இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை.
18 நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
19 நானும் எருசலேமில் மகிழ்ந்து, எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; அங்கு புலம்பலின் குரலும், அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
20 “ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். நூறு வயதில் இறக்கிறவன் வாலிபன் என்று எண்ணப்படுவான்; பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான்.
21 அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
22 அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.
23 அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்; அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
24 அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
25 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும், பாம்போ புழுதியைத் தின்னும். எனது பரிசுத்த மலையெங்கும் அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.
×

Alert

×