English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 32 Verses

1 யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் சேனை!” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம் [*மக்னாயீம் என்றால் இரண்டு சேனைகள் என்று அர்த்தம்.] என்று பெயரிட்டான்.
3 பின்பு யாக்கோபு, ஏதோம் நாட்டிலுள்ள சேயீர் என்னும் இடத்தில் வசிக்கும் தன் சகோதரன் ஏசாவிடம், தனக்கு முன்பாகத் தூதுவரை அனுப்பினான்.
4 அவன் அவர்களுக்கு அறிவுறுத்தி, “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவிடம் போய், ‘உமது பணியாளன் யாக்கோபு சொல்வது இதுவே: நான் லாபானுடன் இருந்தேன், இதுவரையும் அங்கேயே தங்கியிருந்தேன்.
5 என்னிடம் மாடுகளும், கழுதைகளும், செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் உண்டு. வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருக்கிறார்கள். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கும்படியாக, இந்த செய்தியை என் எஜமானாகிய உமக்கு அனுப்புகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
6 தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பிவந்து, “நாங்கள் உமது சகோதரன் ஏசாவிடம் போனோம், அவர் உம்மைச் சந்திக்க வருகிறார்; அவருடன் நானூறு மனிதரும் வருகிறார்கள்” என்றார்கள்.
7 அதைக்கேட்ட யாக்கோபு பயமும் மனக்கலக்கமும் அடைந்து, தன்னுடன் இருந்த மனிதரை இரண்டு குழுக்களாகப் பிரித்தான்; ஆட்டு மந்தையையும், மாட்டு மந்தையையும், ஒட்டகங்களையும் இரண்டு குழுக்களாகப் பிரித்தான்.
8 “ஏசா வந்து ஒரு குழுவைத் தாக்கினால் மற்றக் குழுவாவது தப்பும்” என அவன் நினைத்தான்.
9 பின்பு யாக்கோபு, “என் தகப்பனான ஆபிரகாமின் இறைவனே, என் தகப்பனான ஈசாக்கின் இறைவனே, ‘நீ உன் நாட்டிற்கும், உன் உறவினரிடத்திற்கும் போ; நான் உன் வாழ்வை வளம்பெறச் செய்வேன்’ என்று சொன்ன யெகோவாவே,
10 உமது பணியாளனாகிய எனக்கு நீர் காட்டிய எல்லாவித இரக்கத்திற்கும், சத்தியத்திற்கும் நான் தகுதியற்றவன். நான் யோர்தான் நதியைக் கடக்கும்போது, ஒரு கோல் மட்டுமே என்னிடம் இருந்தது; ஆனால் இப்பொழுதோ இரு பெரும் மக்கள் கூட்டமாகிவிட்டேன்.
11 என் சகோதரன் ஏசாவின் கையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும் என்று மன்றாடுகிறேன். ஏனெனில், அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும், அவர்கள் தாய்மாரையும் தாக்குவான் என்று பயப்படுகிறேன்.
12 ஆனாலும் நீர், ‘நிச்சயமாகவே நான் உன்னை வளம்பெறச் செய்வேன், உன் சந்ததிகளை எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போல பெருகப்பண்ணுவேன்’ என்று சொல்லியிருக்கிறீரே” என்றான்.
13 அன்றிரவு அவன் அங்கேயே தங்கினான்; பின் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்பளிப்பாக,
14 இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக் கடாக்கள்,
15 முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்தான்.
16 அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் வேலைக்காரரிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சிறிது இடம்விட்டு, எனக்கு முன்னே போங்கள்” என்றான்.
17 அவன் முன்னே செல்பவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகிறாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்குச் சொந்தக்காரன் யார்?’ என்று கேட்டால்,
18 ‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; இவற்றைத் தன் ஆண்டவன் ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார், அவரும் எங்கள் பின்னே வருகிறார்’ என்று சொல்” என்றான்.
19 “ஏசாவைச் சந்திக்கும்போது இதேவிதமாகவே சொல்லவேண்டும்” என்று இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மந்தைகளைப் பின்தொடர்ந்து சென்ற மற்றவர்களுக்கும் அவன் அறிவுறுத்தினான்.
20 “ ‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எங்கள் பின்னால் வருகிறான்’ என்பதைத் தவறாமல் சொல்லுங்கள்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்பளிப்புகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என நினைத்தான்.
21 அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான்.
22 அன்றிரவு யாக்கோபு எழுந்து தன் இரண்டு மனைவிகளையும், இரண்டு பணிப்பெண்களையும், தன் பதினொன்று மகன்களையும் கூட்டிக்கொண்டு யாப்போக்கு ஆற்றின் துறையைக் கடந்தான்.
23 அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பியபின் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான்.
24 அதன்பின் யாக்கோபு தனிமையில் இருந்தான், அப்பொழுது ஒரு மனிதர் வந்து பொழுது விடியும்வரை அவனுடன் போராடினார்.
25 யாக்கோபை மேற்கொள்ள முடியாதென்பதைக் கண்ட அவர் தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் தொடைச்சந்தைத் தொட்டவுடனே தொடைச்சந்து இடம் விலகியது.
26 அப்பொழுது அந்த மனிதர், “என்னைப் போகவிடு; பொழுது விடிகிறது” என்றார். அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான்.
27 அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான்.
28 அப்பொழுது அவர், “உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல் [†இஸ்ரயேல் என்றால் இறைவன் போராடுகிறார் என்ற அர்த்தம்.] எனப்படும். ஏனெனில், நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.
29 அப்பொழுது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடையப் பெயரை எனக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கேட்டு, அவனை ஆசீர்வதித்தார்.
30 உடனே யாக்கோபு, “நான் இறைவனை முகமுகமாய்க் கண்டும் இன்னும் என் உயிர் தப்பியிருக்கிறது” என்று சொல்லி, அவ்விடத்திற்குப் பெனியேல் [‡பெனியேல் என்றால் இறைவனின் முகம் என்று அர்த்தம்.] என்று பெயரிட்டான்.
31 அவன் பெனியேலைக் கடந்து போகையில், அவனுக்கு மேலாகச் சூரியன் உதித்தது. அவனுடைய தொடைச்சந்து இடம்விலகி இருந்ததால், அவன் நொண்டிக்கொண்டு நடந்தான்.
32 யாக்கோபின் தொடைச்சந்து அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துடன் இணைந்திருக்கும் தசைநாரைச் சாப்பிடுவதில்லை.
×

Alert

×