(1-2) “யோபுவே, “நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய். தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்! நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா? நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார்.
நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும். நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும்.
யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன். உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.
“யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார். நான் (தேவன்) பிகெமோத்தை [*பிகெமோத் இது என்ன விலங்கு என்று உறுதியாக நமக்குத் தெரியாது. இது காண்டாமிருகமாகவோ அல்லது யானையாகவோ இருக்கலாம்.] உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன். பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது.