English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Proverbs Chapters

Proverbs 8 Verses

1 {#1ஞானத்தின் அழைப்பு } ஞானம் அழைக்கிறதில்லையோ? புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ?
2 அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது.
3 அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது:
4 “மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன்.
5 அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள்.
6 கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும்.
7 உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது.
8 என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை.
9 பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை.
10 வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு.
11 ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல.
12 “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது.
13 தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன்.
14 ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு.
15 என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள்.
16 என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள்.
17 என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள்.
18 என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன.
19 என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது.
20 நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன்.
21 என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன்.
22 “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்;
23 நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன்.
24 சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை.
25 மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே நான் பிறந்திருந்தேன்.
26 அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன்.
27 அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன்.
28 அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன்.
29 கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன்.
30 30. அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து, எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன்.
31 அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
32 “ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; எனது வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
33 எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்; அதை அலட்சியம் செய்யவேண்டாம்.
34 நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
35 என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள்.
36 ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்; என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தையே விரும்புகிறார்கள்.”
×

Alert

×