English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 6 Verses

1 பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்;
2 இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.
3 அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார்.
4 அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள்.
5 பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார்.
6 அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது.
7 அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
8 ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது.
9 நோவாவின் வம்சவரலாறு இதுவே: நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்.
10 நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.
11 பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது.
12 பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார்.
13 எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன்.
14 ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு.
15 அந்தப் பேழையைச் செய்யவேண்டிய விதம்: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும், உயரம் முப்பது முழமாகவும் இருக்கவேண்டும்.
16 பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம் உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள்.
17 வானத்தின் கீழுள்ள எல்லா உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு, நான் பூமியின்மேல் பெருவெள்ளத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதனால் பூமியிலுள்ள எல்லாமே அழிந்துபோகும்.
18 ஆனால், நான் என் உடன்படிக்கையை உன்னுடன் நிலைநிறுத்துவேன்; நீ பேழைக்குள் செல்வாய்; உன்னுடன் உன் மகன்கள், உன் மனைவி, உன் மகன்களின் மனைவிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு பேழைக்குள் செல்.
19 உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு வகையிலும், ஒரு ஜோடியை உன்னுடன் சேர்ந்து உயிர்வாழும்படி பேழைக்குள் அழைத்துச் செல்.
20 பறவைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், விலங்குகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும் உயிருடன் வாழும்படி உன்னுடன் வரும்.
21 சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுப் பொருட்களையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படி இவற்றைச் சேமித்து வை” என்றார்.
22 இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தான்.
×

Alert

×