English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 32 Verses

1 அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பன்னிரண்டாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 “நீ எகிப்தின் அரசனான பார்வோனைப் பற்றி ஒரு புலம்பலை எடுத்து அவனிடம் சொல்லுங்கள்: “ ‘பல நாடுகளின் மத்தியில் நீ ஒரு சிங்கத்தைப் போலிருக்கிறாய்! நீ கடல்களில் இருக்கும் ஒரு இராட்சதப் பாம்பைப்போல் இருக்கிறாய். நீரோடைகளை அங்குமிங்கும் அடித்து, கால்களால் தண்ணீரைக் கலக்கி, நீரோடைகளைச் சேறாக்குகிறாய்.
3 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைக்கொண்டு நான் என் வலையை உன்மேல் வீசுவேன். என்னுடைய வலையினால் அவர்கள் உன்னை மேலே இழுத்துக்கொள்வார்கள்.
4 நான் உன்னைத் தரையிலே எறிந்து திறந்தவெளியில் உன்னை வீசிவிடுவேன். ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மீது தங்கச்செய்து, பூமியின் மிருகங்களெல்லாம் உன்னைத் தின்று திருப்தியுறச் செய்வேன்.
5 நான் உன் சதையை மலைகளில் சிதறச்செய்து, பள்ளத்தாக்குகளை உன் மீதியான சதைகளால் நிரப்புவேன்.
6 வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள் வரைக்கும் நிலத்தையெல்லாம் ஈரமாக்குவேன். மலை இடுக்குகள் உன் சதையினால் நிரப்பப்படும்.
7 நான் உன்னை அழிக்கும்போது, வானத்தை மூடி, அதன் நட்சத்திரங்களை இருளடையச் செய்வேன். சூரியனை மேகத்தால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
8 உனக்கு மேலாக வானங்களில் ஒளிதரும் சுடர்களையெல்லாம் இருளடையச் செய்வேன். உன் நாட்டின்மீதும் நான் இருளை வரச்செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
9 நாடுகளுக்கு மத்தியிலும் நீ அறியாத நாடுகள் மத்தியிலும் நான் அழிவை உன்மேல் கொண்டுவரும்போது, திரளான மக்களின் இருதயத்தைக் கலங்கப்பண்ணுவேன்.
10 உன்னைக் கண்டு அநேக மக்களைத் அதிர்ச்சியுறச் செய்வேன். அவர்களுடைய அரசர்களுக்கு முன்பாக என் வாளை நான் சுழற்றும்போது, அவர்கள் உன் நிமித்தம் பேரச்சத்தால் நடுங்குவார்கள். உனது விழுகையின் நாளில், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உயிருக்காக ஒவ்வொரு வினாடியும் நடுங்குவார்கள்.
11 “ ‘ஏனெனில் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘பாபிலோன் அரசனுடைய வாள் உனக்கு விரோதமாய் வரும்.
12 நாடுகளுக்குள் மிகக் கொடிய வலியோரின் வாள்களினால், உன் மக்கள் கூட்டங்களை விழச்செய்வேன்; எகிப்தின் பெருமையை அவர்கள் ஒழியச்செய்வார்கள். அவளுடைய மக்கள் கூட்டங்களெல்லாம் அழிக்கப்படும்.
13 நிறைவான நீர்நிலைகளருகில் இருக்கும் அவளுடைய மந்தைகளையெல்லாம் அழிப்பேன். அந்த நீர்நிலைகள் இனியொருபோதும் மனித காலினால் குழப்பப்படவோ, அல்லது மந்தைகளின் குழம்புகளால் சேறாக்கப்படவோ மாட்டாது.
14 பின்பு நான் எகிப்தின் நீர்நிலைகளை அமைதலடையச் செய்து, அவளுடைய நீரூற்றுக்களை எண்ணெய்போல் வழிந்தோடச்செய்வேன் என, ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15 நான் எகிப்தைப் பாழாக்கி, நாட்டிலுள்ள அனைத்தையும் நீக்கி, அதை வெறுமையாக்கி, அங்கு வாழும் எல்லோரையும் அழிக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
16 “அவர்கள் அவளுக்காகப் பாடும் புலம்பல் இதுவே. பல நாடுகளின் மகள்களும் அதைப் பாடுவார்கள். எகிப்திற்காகவும் அவளுடைய எல்லா மக்கள் கூட்டங்களுக்காகவும் அவர்கள் அதைப் பாடுவார்கள்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
17 பன்னிரண்டாம் வருடம், முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
18 “மனுபுத்திரனே, நீ எகிப்தின் மக்கள் கூட்டங்களுக்காகப் புலம்பி, அவனையும் பலத்த நாடுகளின் மகள்களையும் குழியில் இறங்குகிறவர்களோடு பூமிக்குக் கீழே ஒப்படைத்துவிடு.
19 நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் தயவு பெற்றவர்களோ? ‘கீழேபோய் விருத்தசேதனமற்றவர்கள் மத்தியில் கிடவுங்கள்’ என நீ அவர்களுக்குச் சொல்.
20 வாளினால் கொல்லப்பட்டவர்களின் மத்தியில் அவர்கள் விழுவார்கள். வாள் உருவப்பட்டு விட்டது. அவளுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றோடும் அவள் வாரிக்கொள்ளப்படட்டும்.
21 வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள்.
22 “அசீரியா தனது எல்லா இராணுவத்தோடும் அங்கே இருக்கிறது. வாளினால் மடிந்தோருடைய கல்லறைகளினால் அது சூழப்பட்டிருக்கிறது.
23 அவர்களுடைய கல்லறைகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கின்றன. அவளுடைய இராணுவம் அதன் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றது. வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய அனைவருமே வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள்.
24 “ஏலாம் அங்கே இருக்கிறது. அவள் மக்கள் கூட்டங்கள் எல்லாமே அதன் கல்லறையைச் சுற்றி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே, வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். வாழ்வோரின் நாட்டில் திகிலைப் பரப்பிய அனைவருமே, விருத்தசேதனமற்றவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள். அவர்கள் குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
25 அவளுடைய மக்கள் கூட்டங்கள் அவளுடைய கல்லறைகளைச் சூழ்ந்துகிடக்க, வெட்டுண்டவர்களின் மத்தியில் அவளுக்கு ஒரு படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோருமே வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்கள். வாழ்வோரின் நாட்டில் அவர்கள் திகிலைப் பரப்பியபடியால், குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள். வெட்டுண்டவர்களின் நடுவில் அவர்கள் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
26 “மேசேக்கும், தூபாலும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாம் அவர்களுடைய கல்லறைகளைச் சுற்றிக்கிடக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமற்றவர்கள். அவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய காரணத்தால் வாளினால் கொல்லப்பட்டார்கள்.
27 விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று.
28 “பார்வோனே, நீயும் நொறுங்குண்டு, வாளினால் கொலையுண்ட விருத்தசேதனமற்றவர்களின் மத்தியிலே கிடப்பாய்.
29 “ஏதோம் அங்கே இருக்கிறாள். அவளுடைய அரசர்களும், எல்லா இளவரசர்களும் அங்கே இருக்கிறார்கள். அதிகாரமுடையவர்களாய் இருந்தும், வாளினால் செத்தவர்களுடன் கிடத்தப்பட்டார்கள். அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களோடும், குழியில் இறங்குகிறவர்களோடும் கிடக்கிறார்கள்.
30 “வடதிசை இளவரசர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரமுடையவர்களாய் இருந்து, அச்சத்தை விளைவித்த போதிலும், கொலையுண்டவர்களோடு அவமானத்துடன் கீழே போனார்கள். வாளினால் வெட்டப்பட்ட விருத்தசேதனமற்றவர்களாகவே அவர்கள் கிடந்து, குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
31 “பார்வோனும் அவனுடைய இராணுவத்தினர் எல்லோரும் அவர்களைக் காண்பார்கள். அப்பொழுது பார்வோன் வாளினால் கொல்லப்பட்ட தன் மக்கள் கூட்டங்கள் எல்லோரின் நிமித்தமும் தேற்றப்படுவான் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
32 வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பும்படி நானே பார்வோனை ஏவினேன். ஆயினும், பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும், வாளினால் கொல்லப்பட்டவர்களோடு விருத்தசேதனமற்றோர் மத்தியிலே கிடத்தப்படுவார்கள், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
×

Alert

×