English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Judges Chapters

Judges 6 Verses

1 தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் அனுமதித்தார்.
2 மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர்.
3 மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர்.
4 அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
5 மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர்.
6 மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள்.
7 மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள்.
8 எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன்.
9 நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’
10 பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.
11 அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான்.
12 கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.
13 அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் அனுமதித்தார்” என்றான்.
14 கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார்.
15 ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.
16 கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார்.
17 கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர் தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும்.
18 இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான். கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார்.
19 கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான்.
20 தேவனுடைய தூதன் கிதியோனை நோக்கி, “இறைச்சியையும், புளிப்பற்ற அப்பத்தையும் அங்கேயிருக்கும் பாறையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்று” என்றார். கிதியோனும் அவ்வாறே செய்தான்.
21 கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான்.
22 அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான்.
23 ஆனால் கர்த்தர் கிதியோனிடம், “அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!” என்றார்.
24 ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும்.
25 அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு.
26 அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார்.
27 ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான்.
28 நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர்.
29 நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள். ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் மகனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான்.
30 எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது மகனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் மகன் மரிக்க வேண்டும்” என்றனர்.
31 தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான்.
32 யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.
33 இஸ்ரவேலரை எதிர்ப்பதற்கு மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கிலுள்ள பிற ஜனங்களும் ஒன்றாகக் கூடி வந்தனர். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டுத் தங்கினார்கள்.
34 கர்த்தருடைய ஆவி கிதியோனுக்குள் வந்து மிகுந்த வல்லமை பெற்றான். அபியேசர் குடும்பம் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு கிதியோன் எக்காளம் ஊதி அழைத்தான்.
35 மனாசேயின் கோத்திரத்தினரிடம் கிதியோன் செய்தி தெரிவிப்போரை அனுப்பினான். அவர்கள் மனாசேயின் ஜனங்களிடம் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராகும்படி கூறினார்கள். ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தினரிடமும் அவன் செய்தி தெரிவிக்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அதே செய்தியைத் தெரிவிப்பதற்குச் சென்றனர். கிதியோனையும் அவனது ஆட்களையும் சந்திப்பதற்காக அந்தக் கோத்திரத்தினர் சென்றனர்.
36 அப்போது கிதியோன் தேவனிடம், “இஸ்ரவேலரைக் காப்பதற்கு எனக்கு உதவுவதாகக் கூறினீர். அதற்குச் சான்று தாரும்.
37 நான் தரையில் ஆட்டுத் தோலைப் போடுவேன். தரையெல்லாம் உலர்ந்திருக்க, தோலில் மட்டும் பனி பெய்திருந்தால், நீர் கூறியபடியே இஸ்ரவேலரை மீட்பதற்கு என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன்” என்றான்.
38 அவ்வாறே நடந்தது. கிதியோன் காலையில் எழுந்து செம்மறியாட்டுத் தோலைப் பிழிந்தான். ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரைப் பிழிந்தெடுக்க முடிந்தது.
39 அப்போது கிதியோன் தேவனை நோக்கி, “என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்” என்றான்.
40 அன்றிரவு தேவன் அவ்வாறே நடக்கச் செய்தார். செம்மறியாட்டுத் தோல் உலர்ந்திருந்தது. தரையோ பனியால் ஈரமாயிருந்தது.
×

Alert

×