English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 42 Verses

1 எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
2 எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.
3 யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள்.
4 யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை.
5 கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
6 யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
7 யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.
8 யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.
9 யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.
10 அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.
11 நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.
12 அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான்.
13 அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.
14 யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.
15 உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
16 இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17 அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.
18 மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள்.
19 நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
20 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:
21 நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
22 அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.
23 யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
24 அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.
25 பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
26 அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.
27 தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,
28 தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
29 அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
30 தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.
31 நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல.
32 நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
33 அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
34 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.
35 அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.
36 அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.
37 அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.
38 அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றான்.
×

Alert

×