இந்நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதன் என்ற முறையில் தாவீதின் வழிவந்தவர். பரிசுத்த ஆவியைப் பெற்ற நிலையில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததனால், கடவுளின் வல்லமை விளங்கும் இறைமகனாக ஏற்படுத்தப்பட்டார். இவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
புறவினத்தார் அனைவரும் கீழ்ப்படிந்து விசுவசிக்குமாறு, அப்போஸ்தலப் பணிபுரியும் திரு அருளை இவருடைய பெயரின் மகிமைக்காக இவர் வழியாகவே பெற்றுக்கொண்டோம். அந்தப் புறவினத்தாரைச் சார்ந்த நீங்களும் இறைவனின் அழைப்புப்பெற்று, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கிறீர்கள்.
முதலில் உங்கள் அனைவருக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், நீங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட செய்தி உலக முழுவதிலும் பரவியிருக்கிறது.
கடவுளின் திருவுளத்தால், உங்களிடம் வர இறுதியாய் இப்பொழுதாவது எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடுகிறேன். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியால் நான் ஆன்மீக முறையில் வழிபடும் கடவுளே, அவ்வாறு மன்றாடுகிறேன் என்பதற்குச் சாட்சி.
மற்றப் புறவினத்தாரிடையில் நான் அடைந்த பலனை உங்களிடையிலும் அடைய விரும்பி உங்களிடம் வர நான் அடிக்கடி திட்டமிட்டதுண்டு. ஆயினும் இன்றுவரை இயலாமற்போயிற்று; சகோதரர்களே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.
நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்; ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.
ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப் பட்டவனே வாழ்வு பெறுவான்'. என எழுதியுள்ளதன்றோ? இவ்வாறு ஏற்புடையவர்களாக்கும் இறையருட் செயல் முறை அந்த நற்செய்தியிலேயே வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை அது விசுவாசத்தினாலேயே ஆகும்.
இறைப்பற்று இல்லாத மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் மீதெல்லாம் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் ஒழுக்கக் கேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றனர்.
ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.
ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், கடவுளுக்கு உரிய மகிமையை அவருக்கு அளிக்கவுமில்லை; நன்றி செலுத்தவுமில்லை. மாறாக, தங்கள் வீணான சிந்தனைகளில் அறிவிழந்தனர்.
அழிவில்லாக் கடவுளின் மாட்சிமையை விடுத்து, அதற்குப் பதிலாக அழிந்து போகும் மனிதர், பறவைகள், விலங்குகள், ஊர்வன, ஆகியவற்றின் சாயலான உருவங்களை ஏற்று வழிபட்டனர்.
ஏனெனில், அவர்கள் கடவுளின் உண்மையைப் பொய்யாக மாற்றினர்; படைப்புப் பொருட்களுக்கு வழிபாடும் ஊழியமும் செய்தனர். படைத்தவரை மறந்தனர்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேரும் இயல்பான முறையை விட்டு, ஒருவர் மீது ஒருவர் வேட்கை கொண்டு, காமத்தீயால் பற்றி எரிந்தனர்; ஆண்கள் ஆண்களுடன் இழிவான செயல்களைச் செய்து தங்கள் ஒழுக்கக் கேட்டுக்கு ஏற்ற கூலியைத் தங்களிலேயே பெறுபவர் ஆயினர்.
இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளுடைய நியமத்தை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றனர்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களுக்குப் பாராட்டும் அளிக்கின்றனர்.