உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய், ஆதலால் நீயும் கைப்பற்றப்படுவாய்; உன் தெய்வமான காமோசும், அதன் பூசாரிகளும், தலைவர்களும் அடிமைகளாய்க் கொண்டுப் போகப்படுவர்.
மோவாபு தன் இளமை முதல் அமைதியாய் வாழ்ந்தது, தன் வண்டல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் வார்க்கப்படவில்லை; அடிமையாக நாடுகடத்தப் படவுமில்லை; ஆகவே அதன் சுவை அதைவிட்டுப் போகவில்லை, அதன் நறுமணமும் மாறவில்லை.
ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன; கவிழ்க்கிறவர்களை அனுப்புவோம்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதன் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதன் சாடிகளை உடைத்துப் போடுவார்கள்.
அப்போது, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் நம்பிக்கையாய் இருந்த பேத்தேலைக் குறித்து வெட்கத்துக்கு உள்ளானது போல, மோவாபு காமோசைக் குறித்து வெட்கத்துக்குள்ளாகும்.
மோவாபையும் அதன் நகரங்களையும் அழிப்பவன் வந்து விட்டான், அதன் மிக சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்தை நோக்கிப் போகிறார்கள்; சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறும் வாக்கு இதுவே.
அதனைச் சூழ்ந்திருப்பவர்களே, நீங்கள் அனைவரும் அதனைக் குறித்து அழுது புலம்புங்கள்; அதன் பெயரை அறிந்த அனைவரும் கூடியழுங்கள்; 'வலிமை மிக்க செங்கோல் முறிந்ததெவ்வாறு? மகிமையான கோல் உடைந்ததெப்படி?' என்று சொல்லுங்கள்.
தீபோன் என்னும் குடிமகளே! உன் மகிமையை விட்டுக் கீழிறங்கு, வறண்ட நிலத்தில் உட்கார்ந்து கொள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உனக்கெதிராய் வந்து விட்டான், உன் அரண்களைத் தகர்த்து விட்டான்.
மோவாபின் குடிமக்களே, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள், பாறைகளிலே போய்க் குடியேறுங்கள்; உயர்ந்த பாறைகளின் வெடிப்பு பொந்துகளில் கூடு கட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
சபாமாவின் திராட்சைக் கொடியே, யாஜேருக்காக அழுவதை விட மிகுதியாய் உனக்காக அழுகிறேன்; உன்னில் கிளைத்த கொடிகள் கடல் கடந்து படர்ந்தன; யாஜேர் கடல் மட்டும் போய் எட்டின. பாழாக்குவோன் உன் கோடைக்கால கனிகள் மேலும், திராட்சைப் பழ அறுவடை மேலும் பாய்ந்து விட்டான்.
எசேபோன், எலேயாலே ஆகியவற்றின் கூக்குரல், யாஜா வரையிலும் கேட்டது; அவர்களுடைய கதறல் சேகோரிலிருந்து ஓரோனாயீம், எக்ளாத்- ஷூலீஷியா வரையில் கேட்கப்பட்டது. ஏனெனில், நேம்ரிமின் தண்ணீரும் கெட்டுப் போய் விட்டது.
ஆதலால் மோவாபுக்காகத் துயரப்பட்டு என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துக்கமான பண்பாடும்; கிர்ரேஸ் ஊராருக்காக என் இதயம் புல்லாங்குழலைப் போலத் துயரத்தால் விம்மிப் பாடும்; அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்கள் அழிந்தன.
மோவாபின் எல்லா வீட்டு மாடிகளிலும், அதன் தெருக்களிலும் அழுகை மயமாய் இருக்கும்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போல மோவாபை உடைத்தெறிந்தோம், என்கிறார் ஆண்டவர்.
மோவாபு எவ்வாறு உடைந்து விட்டது? அவர்கள் கூக்குரலிடுகிறார்களா? மோவாபு நாணித் தலை கவிழ்ந்ததா? சுற்றிலும் இருக்கிற அனைவருடைய பழிப்புக்கும் நகைப்புக்கும் மோவாபு இலக்கானதா?"
பீதிக்குத் தப்புகிறவன் படுகுழியில் விழுவான், படுகுழி விட்டு மேடேறுபவன் வலையில் சிக்குவான்; ஏனெனில் அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின் மேல் வரப்பண்ணுவோம், என்கிறார் ஆண்டவர்.
ஆயினும், கடைசி நாட்களில் மோவாபை முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்." மோவாபின் மேல் வரும் நீதித் தீர்ப்பின் வாக்கு இத்துடன் முற்றிற்று.