அங்கு மூன்று மாதங்கள் தங்கினார். சீரியாவுக்குக் கப்பலேற இருக்கையில் அவருக்கு எதிராக யூதர்கள் சதி செய்தனர். ஆகவே, அவர் மக்கெதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.
பெரோயா நகரத்துப் பிருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கரான அரிஸ்தார்க்கு, செக்குந்து, தெர்பை நகரத்தானாகிய காயு, தீமோத்தேயு, ஆசியா நாட்டைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீமு ஆகியோர் அவருக்கு வழித்துணையாய்ச் சென்றனர்.
நாங்களோ புளியாத அப்பத் திருநாட்களுக்குப்பின் பிலிப்பிலிருந்து கப்பல் ஏறினோம். ஐந்து நாளில் துரோவாவில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.
வாரத்தின் முதல் நாளில் அப்பத்தைப் பிட்குதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் சின்னப்பர் ஊரை விட்டுப் போகவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கி நள்ளிரவுவரை பேசிக்கொண்டே போனார்.
ஐத்திகு என்ற இளைஞன் ஒருவன் சன்னலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். சின்னப்பர் பேசப் பேச ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டது. தூக்க மயக்கத்தால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி எடுத்த போது பிணமாகக் கிடந்தான்.
நாங்கள் கப்பல் ஏறி, சின்னப்பருக்கு முன்னதாகவே அஸ்ஸோ ஊருக்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டுமென்று அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவ்வூர்வரைக்கும் தரை வழியாக நடந்து போக விரும்பினார்.
அவர்கள் வந்தபின் அவர் அவர்களிடம் பேசிய மொழிகள் இவை: "நான் ஆசியாவிற்கு வந்த நாள்முதல் எப்போதும் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
' மக்கள் கடவுள் பக்கம் மனந்திரும்ப வேண்டும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்ளவேண்டும் ' என யூதருக்கும் கிரேக்கருக்கும் வற்புறுத்திக் கூறினேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
ஆனால், நான் என் உயிரை ஒரு பொருட்டாய்க் கணிக்கவில்லை. அதைப் பெரிதென மதிக்கவில்லை. கடவுளுடைய அருளைப்பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவராகிய இயேசு என்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கைப் பயணத்தை முடிப்பேனாகில் அதுவே போதும்.
"எனவே, உங்களைப்பற்றி விழிப்பாயிருங்கள்; மந்தை முழுவதைக் குறித்தும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், கடவுள் தமது இரத்தத்தினால் சொந்தமாக்கிக் கொண்ட தம் திருச்சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களை அம்மந்தைக்கு மேற்பார்வையாளராக ஏற்படுத்தியுள்ளார்.
எனவே, விழிப்பாயிருங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராமல் நான் உங்கள் ஒவ்வொருவர்க்கும் கண்ணீரோடு அறிவுரை கூறிவந்தேன் என்பதை நினைவில் வையுங்கள்.
இப்பொழுது உங்களைக் கடவுளுக்கும், அவருடைய அருள் வார்த்தைக்கும் ஒப்படைக்கிறேன். அவ்வார்த்தை உங்களுக்கு முழு வளர்ச்சியையும், அர்ச்சிக்கப்பட்டவர் அனைவரோடு பங்கையும் அளிக்கவல்லது.
இவ்வாறு பாடுபட்டு உழைத்து பலவீனரைத் தாங்க வேண்டுமென்று பலவகையில் காட்டினேன். ' பெறுவதினும் தருவதே இன்பம் ' என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதை நினைவில் வைத்தல் வேண்டும்."
இனி நீங்கள் என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அவர் சொன்னதுதான் அவர்களுக்கு மிக்க துயரம் வருவித்தது. அப்படியே கப்பல்வரைச் சென்று அவரை வழியனுப்பினர்.