English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Acts Chapters

Acts 1 Verses

1 தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு செய்ய ஆரம்பித்தவை போதித்தவை எல்லாவற்றையும் குறித்து எழுதினேன்.
2 அவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டவைகளைக் கொடுத்தபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த நாள்வரைக்கும், நிகழ்ந்தவைகளைப் பற்றி அதில் எழுதினேன்.
3 இயேசு தாம் சிலுவையில் வேதனையை அனுபவித்த பின்பு தம்மை சீடர்களுக்குக் காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை நம்பத்தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் அவர்களுக்கு நாற்பது நாளளவும் காட்சியளித்து, இறைவனுடைய அரசைப்பற்றிப் பேசினார்.
4 ஒருமுறை இயேசு சீடர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அவர் சீடர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டுப் போகவேண்டாம். என் பிதாவின் வாக்குறுதியைக்குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, நீங்கள் அதற்காகக் காத்திருங்கள்.
5 ஏனெனில் யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான், ஆனால் இன்னும் சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு பெறுவீர்கள்.”
6 பின்பு சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடி இருந்தபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலரின் அரசை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.
7 அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தால் குறித்து வைத்திருக்கிற நேரங்களையும், காலங்களையும் அறிகிறது உங்களுக்குரியது அல்ல.
8 ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லைவரை, எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
9 இயேசு இதைச் சொன்னபின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டது.
10 இயேசு மேலே போய்க்கொண்டிருக்கையில், சீடர்கள் வானத்தை நோக்கி மேலே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே நின்றார்கள்.
11 அவ்விருவர் சீடர்களிடம், “கலிலேயரே, வானத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு மீண்டும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு அவர் போவதை நீங்கள் கண்டவிதமாகவே, அவர் மீண்டும் வருவார்” என்றார்கள்.
12 பின்பு அவர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்த மலையிலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அது பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் இருந்தது.
13 அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றார்கள். அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா; பிலிப்பு, தோமா, பர்தொலொமேயு, மத்தேயு; அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
14 அவர்கள் அனைவரும் ஒன்றாய்கூடி தொடர்ச்சியாக மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரருங்கூட இருந்தார்கள்.
15 அந்நாட்கள் ஒன்றில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு கூடியிருந்தவர்களோ கிட்டத்தட்ட நூற்றிருபது பேராய் இருந்தனர்.
16 பேதுரு அவர்களிடம், “பிரியமானவர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக்குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகுகாலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய்ப் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது.
17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”
18 அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறி மரித்தான்.
19 எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்லுகிறார்கள். அக்கெல்தமா என்றால், இரத்தநிலம் என்று அர்த்தமாகும்.
20 மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது: “ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் யாரும் குடியேறாதிருப்பார்களாக,’ [*சங். 69:25] என்பதும், “ ‘அவனுடைய பதவியை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.’ [†சங். 109:8]
21 எனவே கர்த்தராகிய இயேசு நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும் நம்மோடு இருந்த ஒருவரைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும்.
22 யோவான் திருமுழுக்கு கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்வரைக்கும், அவன் நம்முடனேகூட இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்படி இருந்தவர்களில் ஒருவன் நம்முடனேகூட, அவர் உயிருடன் எழுந்ததற்குச் சாட்சியாய் இருக்கவேண்டும்” என்றான்.
23 எனவே அவர்கள்: யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இரண்டுபேர்களை முன்னிறுத்தினார்கள்.
24 பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிந்துகொண்டீர் என்பதை எங்களுக்குக் காண்பியும்.
25 யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப்போன, இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு நீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள்.
26 அதற்குப் பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலருடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
×

Alert

×