அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை.
மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம்.
நீ உன்னுடைய இடதுபக்கமாக ஒருபக்கமாகப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாக ஒருக்களித்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள் கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன்னுடைய வலதுபக்கமாக ஒருக்களித்து, யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பதுநாட்கள் வரையும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருடத்திற்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயிற்றையும், சிறுபயிற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பம்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடவேண்டும்.
அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார்.
அப்பொழுது நான்: ஆ, உன்னதமான தேவனே, இதோ, என்னுடைய ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாகச் செத்ததையோ, மிருகத்தால் வேட்டையாடப்பட்டதையோ நான் என்னுடைய சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என்னுடைய வாய்க்குள் போனதுமில்லை என்றேன்.
அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனித மலத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன்னுடைய அப்பத்தைச் சுடு என்றார்.
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.