இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்)
பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர்.
யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.
பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.
இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது: “ ‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள்.
‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ [✡யாத். 20:12, உபா. 5:16-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ [✡யாத். 21:17-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று கூறி இருக்கிறான்.
ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள்.
ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.
உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)
இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை.
அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார்.
அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.
இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார்.
நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும் மேலும் சொல்ல வைத்தது.
மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.