Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Mark Chapters

Mark 10 Verses

Bible Versions

Books

Mark Chapters

Mark 10 Verses

1 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.
2 சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா? என்று கேட்டனர்.
3 அதற்கு இயேசு அவர்களிடம், மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்? என்று கேட்டார்.
4 பரிசேயர்களோ, ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனு மதித்து இருக்கிறார் என்றனர்.
5 அவர்களிடம் இயேசு, மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள்.
6 ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ԅஅவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.
7 ԅஅதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான்.
8 இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.
9 தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக் கூடாது என்றார்.
10 பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர்.
11 அதற்கு இயேசு, எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான்.
12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்து கொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள் என்றார்.
13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர்.
14 இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது.
15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது என்றார்.
16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக் கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.
17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான்.
18 அதற்கு இயேசு, என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்.
19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்.
20 அதற்கு அந்த மனிதன், போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன் என்றான்.
21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா என்றார்.
22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்தது தான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.
23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று என்றார்.
24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது.
25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும் என்றார்.
26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், பிறகு யார் இரட்சிக்கப்படுவார்? என்று கேட்டனர்.
27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்றார்.
28 பேதுரு இயேசுவைப்பார்த்து, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்றான்.
29 இயேசு நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ
30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான்.
31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர் என்றார்.
32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார்.
33 நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப் படைப்பார்கள்.
34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார் என்றார்.
35 பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றனர்.
36 அவர்களிடம் இயேசு, நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? எனக் கேட்டார்.
37 உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும் என்றனர்.
38 அதற்கு இயேசு, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப் போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா? என்று கேட்டார்.
39 அவர்கள், ஆமாம், எங்களால் முடியும் என்றனர். இயேசு அவர்களிடம், நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும்.
40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.
41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது.
42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.
43 ஆனால், நீங்கள் மேற் கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப் போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும்.
44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப் போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும்.
45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார் என்றார்.
46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்க ளோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும் என்றான்.
48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும் என்றான்.
49 அவ்விடத்தில் இயேசு, அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள் என்றார். எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார் என்றனர்.
50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.
51 இயேசு அவனிடம், நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக் கேட்டார். அதற்கு அக் குருடன், போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்றான்.
52 போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய் என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.

Mark 10:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×