கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான்.
அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான்.
அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான்.
எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன்.
உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான்.
இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார்.
நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே மகனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர்.
பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்,” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.
அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.
அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார்.
யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது.
யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா?
நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் அரசர்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள்.
உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன்.
இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது: “ ‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன். அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’ மல்கியா 3:1
நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்”.
(யோவானின் போதனைகளை மக்கள் கேட்டபோது தேவனின் போதனைகள் நல்லவை என்று ஒத்துக்கொண்டனர். வரி வசூலிப்பவர்களும் அதனை ஆமோதித்தனர். இம்மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர்.
ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)
இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து, “ ‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும் நீங்கள் ஆடவில்லை. நாங்கள் சோகப்பாடல் பாடியும் நீங்கள் துக்கம் அடையவில்லை’ என்று கூறுவதுபோல் உள்ளனர்.
அப்போது நகரத்தில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். பரிசேயனின் வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள்.
அவள் இயேசுவின் பாதத்தருகே, அழுதுகொண்டே நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து உலரவைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமண தைலத்தைப் பாதங்களில் பூசினாள்.
தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள், “உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி என்பதை அறிந்திருப்பார்” என்று நினைத்தான்.
“இரண்டு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம் கடனாக வாங்கியிருந்தான்.
பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமல் போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் யார் அதிக அளவில் கடன் கொடுத்த மனிதனை நேசிப்பார்கள்?” என்று கேட்டார் இயேசு.
சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான். இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி சீமோனிடம், “இந்த பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவித் தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள்.
அவளுடைய கணக்கற்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அவள் காட்டிய மிகுந்த அன்பே இதைத் தெளிவாக்குகிறது. மன்னிக்கப்பட வேண்டியதன் தேவையைச் சற்றே உணர்ந்தவன் மன்னிப்படையும்போது சிறிதளவு அன்பையே உணர்வான்” என்றார்.
மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.