Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 13 Verses

Bible Versions

Books

Jeremiah Chapters

Jeremiah 13 Verses

1 இதுதான் கர்த்தர் என்னிடம் கூறுகிறது: "எரேமியா போய் ஒரு சணல் இடுப்புத் துணியை வாங்கு. பிறகு அதனை உன் இடுப்பிலே கட்டிக்கொள். அந்த இடுப்புத்துணி நனையும்படிவிடாதே.
2 எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன்.
3 பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது.
4 இதுதான் செய்தி: "எரேமியா நீ வாங்கினதும் இடுப்பிலே கட்டியிருக்கிறதுமான துணியை எடுத்துக்கொண்டு பேராத்துக்குப் போ. அதை அங்கே பாறையின் வெடிப்பிலே மறைத்துவை."
5 எனவே, நான் பேராத்துக்குப் போய் அங்கே கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி இடுப்புத் துணியை மறைத்து வைத்தேன்.
6 பல நாட்கள் கழிந்தது; கர்த்தர் என்னிடம், "இப்பொழுது எரேமியா! பேராத்துக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புத்துணியை எடுத்துக்கொள்" என்று சொன்னார்.
7 எனவே, நான் பேராத்துக்குச் சென்று இடுப்புத் துணியை தோண்டி எடுத்தேன், ஆனால், இப்பொழுது என்னால் அதனை இடுப்பிலே கட்டமுடியவில்லை. ஏனென்றால், அது மிக பழமையாகிப் போயிருந்தது. அது எதற்கும் பயன்படும் அளவில் நன்றாயில்லை.
8 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது.
9 இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: "இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன்.
10 யூதாவிலுள்ள வீண் பெருமையும், தீமையும்கொண்ட ஜனங்களை, நான் அழிப்பேன். அவர்கள் எனது வார்த்தையைக் கேட்க மறுத்தனர். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாக விரும்புகின்றவற்றை மட்டுமே செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களைப் பின் பற்றி தொழுதுகொண்டனர். யூதாவிலுள்ள அந்த ஜனங்கள் இந்தச் சணல் இடுப்புத் துணியைப்போன்று ஆவார்கள். அவர்கள் அழிக்கப்பட்டு எதற்கும் பயனற்றுப் போவார்கள்.
11 ஒரு இடுப்புத் துணியை ஒரு மனிதன் இடுப்பைச்சுற்றி இறுக்கமாக கட்டுகிறான். இதைப்போலவே நான் என்னைச் சுற்றிலும் இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதாவின் குடும்பத்தையும் கட்டினேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார். "நான் அதைச் செய்தேன். எனவே, அந்த ஜனங்கள் என் ஜனங்களாவார்கள். பிறகு, எனது ஜனங்கள் கனமும் துதியும் மகிமையும் எனக்குக் கொண்டு வருவார்கள். ஆனால் எனது ஜனங்கள் என்னை கவனிக்கவில்லை."
12 "எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்" என்பார்கள்.
13 பிறகு நீ அவர்களிடம், இதுதான் கர்த்தர் சொல்வது. இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனையும் குடிகாரனைப் போன்று உதவியற்றவனாகச் செய்வேன். நான் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் எருசலேமில் வாழும் அனைத்து ஜனங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.
14 நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்" என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். "‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’"
15 கேள் உன் கவனத்தைச் செலுத்து. கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார். வீண் பெருமைகொள்ளாதே.
16 உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி. இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார். இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி. இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார். கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார்.
17 யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறவதைக் கேட்காவிட்டால், உங்களது வீண்பெருமை எனது அழுகைக்குக் காரணம் ஆகும். நான் என் முகத்தை மறைத்து மிகக் கடுமையாக அழுவேன். எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும், ஏனென்றால், கர்த்தருடைய மந்தை சிறைப்பிடிக்கப்படும்.
18 அரசனிடமும் அவனது மனைவியிடமும் இவற்றைக்கூறு: "உங்களது சிங்காசனங்களில் இருந்து இறங்கி வாருங்கள், உங்களது அழகான கிரீடங்கள் உம் தலைகளிலிருந்து விழுந்திருக்கிறது."
19 நெகேவ் வனாந்தரத்தின் நகரங்கள் பூட்டப்பட்டுவிட்டன. எவராலும் அவற்றைத் திறக்க முடியாது. யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் சிறைபிடிக்கப்பட்டு அவர்களைக் கைதிகளாக வெளியே கொண்டு சென்றனர்.
20 எருசலேமே! பார். பகைவன் வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருக்கிறான். உனது மந்தை எங்கே? தேவன் உனக்கு அந்த அழகிய மந்தையைக் கொடுத்தார். நீங்கள் அந்த மந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள்.
21 அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் ஜனங்களுக்கு தேவனைப் பற்றி கற்பிக்க வேண்டியவர்கள். உங்கள் தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. எனவே உங்களுக்கு மிகுதியான துன்பங்களும் கஷ்டங்களும் இருக்கும். நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணைப்போன்று இருப்பீர்கள்.
22 நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்கலாம். "ஏன் எனக்கு இத்தீமைகள் ஏற்பட்டன?" அவை, உங்களது பல பாவங்களாலேயே ஏற்பட்டன. உங்களது பாவங்களால் உங்கள் உள்ளாடைகள் கிழிக்கப்பட்டன. உங்களது பாதரட்சைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காக இவற்றைச் செய்தனர்.
23 ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய்.
24 "உங்களது வீட்டை விட்டு விலகும்படி நான் உங்களைக் கட்டாயப்படுத்துவேன். நீங்கள் எல்லா திசைகளிலும் ஓடுவீர்கள். நீங்கள் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப் போன்றிருப்பீர்கள்.
25 இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும். எனது திட்டங்களில் இதுவே உங்கள் பங்கு" என்று கர்த்தர் சொல்லுகிறார். "இது ஏன் நிகழும்? ஏனென்றால், நீ என்னை மறந்தாய். பொய்த் தெய்வங்களிடம் நம்பிக்கை வைத்தாய்.
26 எருசலேமே! நான் உனது உள்ளாடையை உன் முகத்தின்மேல் போடுவேன். ஒவ்வொருவரும் உன்னைப் பார்ப்பார்கள். நீ அவமானம் அடைவாய்.
27 நீ செய்த பயங்கரமான செயல்களை எல்லாம் நான் பார்த்தேன். நீ சிரித்ததைப் பார்த்தேன். உனது நேசர்களுடன் நீ கொண்ட பாலின உறவுகளையும் பார்த்தேன். நீ ஒரு வேசியைப் போன்று, போட்டுக்கொண்ட திட்டங்களை நான் அறிவேன். மலைகளின் மேலும், வயல்களிலும் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். எருசலேமே, இது உனக்கு கெட்டதாக இருக்கும். நீ இன்னும் எவ்வளவு காலத்திற்கு உனது தீட்டான பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பாய் என நான் யோசிக்கிறேன்."

Jeremiah 13:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×