Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Genesis Chapters

Genesis 18 Verses

Bible Versions

Books

Genesis Chapters

Genesis 18 Verses

1 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான்.
2 ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான்.
3 ஆபிரகாம், "ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள்.
4 உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக் கடியில் ஓய்வுகொள்ளுங்கள்.
5 நான் உங்களுக்கு உணவைக் கொண்டு வருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்" என்றான். அந்த மூன்று மனிதர்களும், "அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்" என்றனர்.
6 ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், "சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்" என்றான்.
7 பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான்.
8 ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
9 பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், "உனது மனைவி சாராள் எங்கே?" என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம், "அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்" என்றான்.
10 பிறகு கர்த்தர், "நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்" என்றார். சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
11 ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள்.
12 எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், "நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்" என்றாள்.
13 கர்த்தர் ஆபிரகாமிடம், "சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள்.
14 கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்" என்றார்.
15 ஆனால் சாராளோ, "நான் சிரிக்கவில்லையே" என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்) ஆனால் கர்த்தரோ, "இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்" என்றார்.
16 பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.
17 கர்த்தர் தனக்குள், "நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன்.
18 ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
19 நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்" என்று சொல்லிக் கொண்டார்.
20 மேலும் கர்த்தர், "சோதோம், கொமோரா ஜனங்கள் மிகவும் பாவிகள் என்று நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.
21 எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்" என்றார்.
22 ஆகையால், அந்த மனிதர்கள் திரும்பி சோதோமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ஆனால் ஆபிரகாம் கர்த்தருக்கு முன்னால் நின்றான்.
23 பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, "கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா?
24 அந்த நகரத்தில் 50 நல்ல மனிதர்கள் இருந்தால் என்ன செய்வீர்? அழித்துவிடுவீரா? உறுதியாக நீர் அந்த 50 நல்ல மனிதர்களுக்காக அந்நகரத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும்.
25 உம்மால் உறுதியாக அந்நகரத்தை அழிக்க முடியாது. தீயவர்களை அழிப்பதற்காக அந்த 50 நல்ல மனிதர்களையும் உம்மால் அழிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் பிறகு நல்ல மனிதர்களும் தீய மனிதர்களும் ஒரே மாதிரி ஆகிவிடுவார்கள். இருவருமே தண்டிக்கப்பட்டுவிடுவார்கள். பூமி முழுவதற்கும் நீரே நீதிபதி. நீர் நியாயமானவற்றையே செய்வீர் என்று எனக்குத் தெரியும்" என்றான்.
26 பிறகு கர்த்தர், "என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்" என்றார்.
27 பிறகு ஆபிரகாம், "கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும்.
28 அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?" என்று கேட்டான். அதற்கு கர்த்தர், "நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றார்.
29 ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், "நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?" என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், "நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்று சொன்னார்.
30 மேலும் ஆபிரகாம் "கர்த்தாவே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதிரும். இதையும் கேட்க அனுமதியும், அந்நகரத்தில் 30 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால், அந்நகரத்தை அழித்துவிடுவீரா?" என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், "நான் 30 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றார்.
31 பிறகு ஆபிரகாம், "கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், "நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றார்.
32 மேலும் ஆபிரகாம், "கர்த்தாவே என் மீது கோபம் கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?" என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், "நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றார்.
33 கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.

Genesis 18:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×