Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

2 Chronicles Chapters

2 Chronicles 25 Verses

Bible Versions

Books

2 Chronicles Chapters

2 Chronicles 25 Verses

1 அரசனானபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அர சாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண்.
2 கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை.
3 அமத்சியா பலமுள்ள அரசன் ஆனான். தன் தந்தையைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றான்.
4 ஆனால் அவன் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளைக் கொல்லவில்லை. ஏனென்றால் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அவன் அடிபணிந்தான். கர்த்தர், "பிள்ளைகளின் செயல்களுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்படக்கூடாது. ஒருவன் தான் செய்த பாவத்துக்காகமட்டுமே தண்டிக்கப்படவேண்டும்" என்று கட்டளையிட்டிருக்கிறார்.
5 அமத்சியா யூதாவின் ஜனங்களை அனைவரையும் ஒன்றாகத் திரட்டினான். சில குழுக்களாக அவர்களை அவன் பிரித்தான். பிறகு அக்குழுக்களுக்கு தளபதிகளையும், தலைவர்களையும் நியமித்தான். அவர்கள் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தின் வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இருபதும் அதற்கு மேலும் வயதுடைய வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஈட்டியும் கேடயமும் கொண்டு போரிடும் வீரர்கள் 3,00,000 பேர் இருந்தனர்.
6 அமத்சியா இஸ்ரவேலில் இருந்து 1,00,000 வீரர்களை அழைத்தான். அவர்களுக்கு 100 தாலந்து வெள்ளியைக் கூலியாகக் கொடுத்தான்.
7 ஆனால் ஒரு தேவமனிதன் (தீர்க்கதரிசி) ஒருவன் அமத்சியாவிடம் வந்தான். அவன், "அரசனே இஸ்ரவேல் வீரர்களை உன்னோடு அழைத்துக் கொண்டு போகாதே. கர்த்தர் இஸ்ரவேலர்களோடு இல்லை. எப்பிராயீம் ஜனங்களோடும் கர்த்தர் இல்லை.
8 உன்னை நீயே பலப்படுத்திக்கொண்டு போருக்கு தயாராகலாம். ஆனால் நீ வெற்றிபெறவோ அல்லது தோல்வியடையவோ தேவன் உதவுவார்" என்றான்.
9 அமத்சியா தேவமனிதனிடம், "இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?" என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், "கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்" என்றான்.
10 எனவே, அமத்சியா இஸ்ரவேல் படையை எப்பிராயீமுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். அவர்களுக்கு அரசன் மீதும், யூதா ஜனங்கள் மீதும் கோபம் மிகுந்தது. அவர்கள் கோபத்தோடு வீட்டிற்குத் திரும்பினார்கள்.
11 பிறகு அமத்சியா மிகுந்த தைரியத்தோடு தனது படையை ஏதோம் நாட்டிலுள்ள உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்கே அமத்சியாவின் படையானது 10,000 சேயீர் ஆண்களைக் கொன்றது.
12 யூதாவின் படை சேயீரிலிருந்து 10,000 ஆண்களையும் பிடித்தது. அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோனார்கள். அந்த ஆட்கள் இன்னமும் உயிருடன் இருந்தார்கள். பின்னர் யூதாவின் படை அவர்களை மலையுச்சியில் இருந்து கீழே வீசி எறிந்தது. அவர்களது உடல்கள் கீழேயிருந்த பாறைகளின் மேல் உடைந்தன.
13 அதே நேரத்தில், இஸ்ரவேல் படையானது யூதா நகரங்களைத் தாக்கியது. அவர்கள் பெத்தொரோன் முதல் சமாரியாவரையுள்ள நகரங்களை எல்லாம் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரை கொன்று விலைமதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை அமத்சியா தன்னோடு போருக்கு அழைத்து போகாததால் அவர்கள் கோபமாக இருந்தனர்.
14 ஏதோமிய ஜனங்களை வென்ற பிறகு அமத்சியா வீட்டிற்குத் திரும்பினான். சேயீர் ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வ விக்கிரகங்களை அவன் கொண்டு வந்தான். அமத்சியா அவற்றைத் தொழுதுகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவற்றின் முன்னால் அவன் தரையில் விழுந்து வணங்கி அவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தான்.
15 அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, "அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் Ԕஇருந்து காப்பாற்ற முடியவில்லையே!" என்றான்.
16 அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், அரசன் அவனிடம், "அரசனுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்" என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, "தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை" என்றான்.
17 யூதாவின் அரசனான அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் அரசனான யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், "நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்" என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் மகன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் மகன் ஆவான்.
18 பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் அரசன். அமத்சியா யூதாவின் அரசன். யோவாஸ், "லீபனோனில் உள்ள முட் செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது.
19 நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்" என்று சொல்லி அனுப்பினான்.
20 ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும்.
21 ஆகையால் இஸ்ரவேல் அரசனான யோவாஸ் யூதாவின் அரசனான அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது.
22 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான்.
23 யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் அரசன் எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான்.
24 பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத் ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான்.
25 யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் அரசனான யோவாஸ் ஆவான்.
26 அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் ‘யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
27 அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் அரசனுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லஈகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர்.
28 பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

2-Chronicles 25:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×