English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 13 Verses

1 அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் [*கடலின் கிரேக்க மொழியில் கலிலேயாக் கடல் ஏரி என்றும் சொல்லப்படுகிறது.] அருகே உட்கார்ந்திருந்தார்.
2 அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
3 இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
5 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்
6 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
7 வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
8 ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.
9 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
10 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
11 இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை.
12 இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13 இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “ ‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’
14 ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “ ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ [†ஏசா. 6:9,10 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.]
16 உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.
17 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
18 “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
19 யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்.
20 கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள்.
21 ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள்.
22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள்.
23 நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”
24 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
25 எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
26 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
27 “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும்.
30 அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ”
31 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது.
32 அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
33 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ [‡மூன்றுபடி மாவு] மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.
34 இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை.
35 இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.” [§சங். 78:2]
36 அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள்.
37 இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே.
38 வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.
39 அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள்.
40 “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும்.
41 மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள்.
42 இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
43 அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
44 “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான்.
45 “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.
46 பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
47 “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
48 வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள்.
49 இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து
50 அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
51 “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
52 “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
53 இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார்.
54 அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.
55 அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு [*யோசேப்பு எனப்பட்ட யோசே] , சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?
56 இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
57 அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
58 அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
×

Alert

×