அப்பொழுது அவன் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். ஆனால் அவரோ உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.
நீங்கள் போய், அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் சொல்லுங்கள், ‘இயேசு உங்களுக்குச் சொன்னதுபோலவே, உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். நீங்களும் அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார்.
பின்பு சீடர்கள் பதினொருபேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்; அவர் சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.
யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து, திருமுழுக்கு பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள்.
அவர்கள் பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; சாகவைக்கக் கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடுவிளைவிக்காது; அவர்கள் நோயாளிகளின்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்” என்றார்.
அதற்குப் பின்பு, அவருடைய சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி, தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார். [*பழைமையான பிரதிகளிலும் வேறுசில பழைய சாட்சிகளிலும். 16:9-20 வசனங்கள் இல்லை.]