நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் யெகோவாவிடம் திரும்புங்கள்; நீங்கள் அவரிடம், “எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.
அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை ‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.”
திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; அவன் தானியத்தைப்போல் செழிப்பான். திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்; அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும்.
எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன். நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன். அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.”
ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.