1
|
பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. |
2
|
தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது. |
3
|
சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். |
4
|
அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரைத் தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன என்றது. |
5
|
சிம்மாசனத்தில் இருந்தவர், பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை என்றார். |
6
|
சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். |
7
|
எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான். |
8
|
ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம் என்றார். |
9
|
ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன் என்றான். |
10
|
அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தது. |
11
|
அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. |
12
|
அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. |
13
|
கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. |
14
|
நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. |
15
|
என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. |
16
|
அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. |
17
|
அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. |
18
|
அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. |
19
|
நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். |
20
|
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. |
21
|
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும்ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது. |
22
|
அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். |
23
|
அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார். |
24
|
இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். |
25
|
எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந் நகரில் இரவு என்பதே இல்லை. |
26
|
அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். |
27
|
சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும். |
Revelation 21:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...