அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள்.
ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான்.
யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை.
எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான்.
நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும். முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன். ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள். அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன். உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.