அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்! நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள். முதியோர் எழுந்து நின்றனர். என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள். ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
குருடர்களுக்கு நான் கண்களானேன். அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன். முடவருக்கு நான் காலானேன். அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள். வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன். பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று, நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.