திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார்.
பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன், “நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். உபாகமம் 31:6
உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள்.
எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.
பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது.
எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார்.
இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம்.
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.
எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம்.
(20-21) சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று.
நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.