ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.
அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை;