Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Joshua Chapters

Joshua 24 Verses

Bible Versions

Books

Joshua Chapters

Joshua 24 Verses

1 பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
2 அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்;
3 நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்;
5 நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்த பின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.
6 நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.
7 அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.
8 அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன்.
9 அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.
10 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.
11 பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
12 எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.
14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
16 அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
17 நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.
18 தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
19 யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.
20 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.
21 ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.
22 அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
24 அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
25 அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.
26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,
27 எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி,
28 யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.
29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
31 யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.
32 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.
33 ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Joshua 24:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×