Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

2 Samuel Chapters

2 Samuel 13 Verses

Bible Versions

Books

2 Samuel Chapters

2 Samuel 13 Verses

1 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.
2 தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.
3 அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
4 அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.
5 அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.
6 அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
7 அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.
8 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,
9 சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.
10 அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.
11 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.
12 அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.
13 நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள்.
14 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.
15 பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.
16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,
17 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
18 அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.
19 அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.
20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.
21 தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.
22 அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
23 இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.
24 அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
25 ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.
26 அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.
27 அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.
28 அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
29 அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.
30 அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது.
31 அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.
32 அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.
33 இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.
34 ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான்.
35 அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.
36 அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள்.
37 அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
39 தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

2-Samuel 13:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×