உரிமை பாராட்டுதற்குரிய செயல் புரியாத ஒருவன், பாவியைத் தமக்கு ஏற்புடையவன் ஆக்குபவர் மீது விசுவாசம் வைத்தால், அவ்விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவனை ஏற்புடையவன் என மதிக்கிறார்.
இனி, பேறு பெற்றவன் என்னும் அந்த ஆசிமொழி விருத்தசேதனம் உள்ளவனுக்கு மட்டுமா? இல்லாதவனுக்கும் கூடவா? 'ஆபிரகாமின் விசுவாசத்தை முன்னிட்டு இறைவன் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்' என்கிறோமே, அவர் எந்த நிலையில் இருக்கும்போது இறைவன் அவ்வாறு மதித்தார்?
விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையிலன்று; செய்து கொள்ளாத நிலையில் தான் விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவரானார்; அதற்கு முத்திரையாகவே விருத்தசேதனத்தை அடையாளமாகப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், இறைவனுக்கு ஏற்புடையவராக மதிக்கப்படும் முறையில் விசுவசிக்கிற யாவருக்கும் அவர் தந்தையானார்.
விருத்தசேதனம் இருந்தும், அதுவே, போதுமென்றிராமல் விசுவாசம் கொள்கிறவர்களுக்கும் தந்தையானார்; ஏனெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே விசுவசித்தது போல அவர்களும் விசுவசித்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.
உலகமே அவருக்கு உரிமையாகும் என்ற வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவர் வழி வந்தவர்களுக்கோ திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைக்கவில்லை; விசுவாசத்தினால் அவர் இறைவனுக்கு ஏற்புடையவரானதால்தான், அவ்வாக்குறுதி கிடைத்தது,
ஆகவே, யாவும் அருளின்,, செயலாய் விளங்கும்படி, விசுவாசம் அனைத்திற்கும் அடிப்படையாயிற்று; இவ்வாறு ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எல்லாருக்கும் வாக்குறுதி செல்லக் கூடியதாயிற்று. ஆபிரகாமின் வழி வந்தவர்கள் எனக்குறிக்கப்படுகிறவர்கள் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லர். அவரைப்போல் விசுவாசம் கொண்டவர்களும் ஆவர்.
ஏனெனில், பல இனத்தார்க்குத் தந்தையாக உன்னை எற்படுத்தினேன்' என்று எழுதியுள்ளவாறு ஆபிரகாம் நம்மனைவர்க்கும் தந்தையானார், ஆம், இறந்தவர்களை வாழ்வளிக்கிறவரும், இல்லாததைத் தம் சொல்லால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மேல் விசுவாசம் வைத்து, அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டார்.
'உன் வழி வருவோர் இத்துணை மிகுதியாய் இருப்பர்' எனச் சொல்லப்பட்டது. அது நிறைவேறும் என்ற நம்பிக்கைக்கு இடம் இல்லாதததுபோல் தோன்றினும், அவர் நம்பிக்கை கொண்டார்; விசுவசித்தார்; ஆகவே அந்த வாக்குறுதிக்கேற்பப் பல இனத்தார்க்குத் தந்தையானார்.
தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆனதால் தம் உடல் ஆற்றலற்றுப் போனதையும், சாராளுடைய சூலகத்தின் ஆற்றலின்மையையும் எண்ணிப் பார்த்தபோதும். அவர் விசுவாசத்தில் உறுதி தளரவில்லை. அவிசுவாசம் கொள்ளவில்லை;