ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
அப்படியானால், 'நன்மை விளையுமாறு தீமையைச் செய்வோம்' என்று சொல்லாலாமே. நான் அவ்வாறு கூறுவதாகச் சிலர் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர். இவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறுவது நீதியே.
அப்படியானால் மற்றவர்களைவிட யூதர்கள் தாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்தின் பிடியிலுள்ளதாக ஏற்கெனவே எண்பித்தாயிற்று.
திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும். சாக்குச் சொல்லாமல் அனைவருடைய வாயையும் அடைக்கவும், உலகம் முழுவதையும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கவுமே திருச்சட்டம் இருக்கிறது.
ஏனெனில், திருச்சட்டம் விதித்திருப்பதைச் செய்வதால் மட்டும், எம்மனிதனும் இறைவன் முன்னிலையில் ஏற்புடையவன் ஆவதில்லை. ஏனெனில் சட்டத்தின் வழியாக உண்டாவது பாவத்தை உணர்த்தும் அறிவே.
இத்திருவருட் செயல்முறை இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் வழியாய்ச் செயலாற்றுவதாகும்., விசுவசிக்கும் அனைவருக்காகவுமே இது செயலாற்றுகிறது. இதில் இன வேறுபாடே இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்தனர்.
ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
விசுவாசத்தின் வழியாய்ச் செயல்படும் பரிகாரச்சாதனமாக அவரைக் கடவுள் இரத்தப் பலியாக்கினார். கடந்த காலத்தில் தம்முடைய திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பிய கடவுள் பொறுமையாய் இருந்து, மனிதர் செய்த பாவங்களைத் தண்டிக்காமல் விட்டார்.
இக்காலத்திலோ, அத்திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பி, அவர் அருள் மிக்கவராகவும், இயேசுவில் விசுவாசம் கொள்பவன் தமக்கு ஏற்புடையவன் ஆகும்படி அருள் அளிப்பவராகவும் விளங்குகிறார்.,