அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் எனலாமா? ஒருகாலும் இல்லை. நானும் ஓர் இஸ்ராயேலன் தானே. நானும் ஆபிரகாமின் வழிவந்தவன்., பென்யமீனின் குலத்தைச் சார்ந்தவன்.
ஆண்டவரே உம்முடைய வாக்குரைப்போரைக் கொன்று போட்டனர்; உம் பீடங்களைத் தகர்த்தெறிந்தனர்; எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் ' என்று கடவுளிடம் மன்றாடினார்.
அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது பொருள்; செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அருள் அருளாகாது.
அப்படியானால் முடிவென்ன? தாங்கள் தேடுகிறதை இஸ்ராயேல் மக்கள் இன்னும் அடையவில்லை; அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் அடைந்தனர்; மற்றவர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.
அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: ' மரத்துப்போன மனத்தைக் கடவுள் அவர்களுக்குத் தந்தார். காணாத கண்களையும் கேளாத செவிகளையும் தந்தார், இந்த நாள்வரை அவ்வாறே உள்ளனர். '
அப்படியானால், அவர்கள் கால் இடறியது விழுந்து ஒழிவதற்கா? இல்லவே இல்லை. அவர்கள் தவறியதால் புறவினத்தாருக்கு மீட்புக் கிடைத்தது; அவர்களுள் போட்டி மனப்பான்மையைத் தூண்டவே இங்ஙனம் ஆயிற்று.
அவர்கள் தவறியதால் உலகம் வளமுற்றதென்றால், அவர்கள் வீழ்ச்சியுற்றதால் புறவினத்தார் வளம்பெற்றனர் என்றால் யூதர்கள் முழுத் தொகையும் மனந்திரும்பும் போது அவ்வளம் இன்னும் எத்துணையோ மிகுதியாகும்.
ஆனால் என் இனத்தாருள் போட்டி மனப்பான்மையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரை மீட்கக் கூடும் என்று நம்பியே அந்த அப்போஸ்தலத் திருப்பணியை மேலானதாக மதிக்கிறேன்.
முதலில் ஒரு பிடி மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துப் பரிசுத்தமாக்கினால், கலவை முழுவதும் பரிசுத்தம் ஆகிறது; அவ்வாறே வேர் பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமானவையே.
ஒலிவ மரத்தின் கிளைகள் சில தறிக்கப்பட்டபின், காட்டொலிவ மரக்கிளையாகிய நீ அந்த ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டு, அதன் வளமார்ந்த வேரோடு பங்கு பெற்றாய் எனின். அக்கிளைகளை விட உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ளாதே.
சரிதான்; அவர்கள் விசுவசியாததால் தறிக்கப்பட்டார்கள், நீயோ விசுவாசிப்பதால் நிலைத்து நிற்கிறாய்; அதனால் நீ உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ள இடமில்லை; அச்சந்தான் உனக்கு இருக்க வேண்டும்.
ஏனெனில் காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீ வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டாயானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுவது எவ்வளவு எளிது!
சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னரே இஸ்ராயேல் இனம் மீட்கப்படும்; அதற்கொப்பவே மறை நூலிலும்: 'விடுதலை அளிப்பவர் சீயோனிலிருந்து வருவார், யாக்கோபின் குலத்திலிருந்து இறைப்பற்றின்மை அனைத்தையும் போக்கிவிடுவார்;
நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இறைவனின் வெறுப்புக்கு உரியவர்களே; அதுவும் உங்கள் நன்மைக்கே, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுடைய முன்னோரை முன்னிட்டு, அவர்கள் இறைவனின் அன்புக்கு உரியவர்களே.
அதுபோல நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டதால் அவர்கள் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; அவர்கள் இப்படிக் கீழ்ப்படியாமல் இருப்பது, அவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வதற்கே.
கடவுளின் அருட்செல்வம் எத்துணை மிகுதியானது! அவரின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய திட்டங்கள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.